Vettri

Breaking News

அரசு ஈஸ்டர் தாக்குதலின் துயரத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது – நாமல் குற்றச்சாட்டு




 



துரதிஷ்டவசமாக தற்போதைய அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதலின் துயரத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.


தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர், தற்போது இடம்பெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைக்கு மத்தியில் உணர்ச்சிப்பூர்வமான பதில்களைத் தூண்டவும், பொது மக்களின் உணர்வுகளைக் கையாளவும் அரசாங்கம் அதனைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


நீதியரசர் ஜனக டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அப்போதைய ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய உத்தியோகபூர்வமாக கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி அல்லது அதனை அண்டிய காலப்பகுதியில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.அந்த அறிக்கையினை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக பொது மக்கள் பார்வையிட முடியும்.


ஏலவே குறித்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் சட்டமா அதிபரிடம் உள்ளன.


இந்த விடயம் தொடர்பில் சட்டரீதியான குற்றவியல் விசாரணைகள் பாரபட்சமற்ற வகையில் நடத்தப்பட வேண்டும்.


முதலில் ஒரு இலக்கை அடையாளம் கண்டு, பின்னர் முன்கூட்டிய குற்றச்சாட்டை ஆதரிப்பதற்கான ஆதாரங்களைத் தேடுவது விசாரணை அல்ல.


குறித்த நடவடிக்கையானது தனிநபர்களை, குறிப்பாக மாறுபட்ட அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களைத் துன்புறுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமிடலாகும்.


தார்மீக மேன்மையை வெளிப்படுத்தும் செயல்திறனுடன் செயல்படும் இந்த அரசாங்கம், இந்த தேசியத் துயரத்தை அரசியல் ஆதாயத்திற்கானதொரு கருவியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என தாம் கடுமையாக வலியுறுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


அத்துடன், இத்தகைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளை மிகவும் அவமதிப்பவையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments