Vettri

Breaking News

உதுமாலெப்பை எம். பி கட்சியை அழிக்கிறார் : போர்க்கொடி தூக்கும் மு.கா!!




 மாளிகைக்காடு செய்தியாளர்


முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை 20 வருடங்களாக துன்புறுத்தி வந்த முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையை மன்னித்து, முஸ்லிம் காங்கிரசுக்குக்குள் எடுத்து, அவரை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக்கிய பின்னரும், முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு எதிரான அவரின் அட்டகாசங்களும் வன்முறைகளும் இன்னும் குறைவடையவில்லை என, அந்தக் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுத் தலைவர் எஸ்.எல்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து நடத்திய கூட்டமொன்றில் வைத்து, தன்னையும் கட்சியின் மூத்த போராளிகளையும் 'மடையன்' என்றும் 'நீ' என ஒற்றை வார்த்தையிலும் உதுமாலெப்பை பேசியதோடு, அந்த இடத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு எதிராக வன்முறையைக் கையில் எடுத்ததாகவும் ஹலீம் குற்றஞ்சாட்டினார்.

இந்த விவகாரத்தை கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு - தான் தெரியப்படுத்தியுள்ளதாகவும் ஹலீம் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மத்திய குழுத் தலைவைர் ஹலீம் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்;
"முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் காலத்தில் - எமது கட்சியில் உதுமாலெப்பை இணைந்திருந்தார். தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமைப் பதவி ஏற்றவுடன் அதாஉல்லாவுடன் உதுமாலெப்பையும் கட்சியை விட்டு வெளியேறினர். அதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கான அத்தனையினையும் உதுமாலெப்பை செய்தார். குறிப்பாக அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் - முஸ்லிம் காங்கிரல் போராளிகளுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்தார். அரசியலுக்காக ரத்தமோட்டினார். இது 20 வருடங்களுக்கும் மேலாக நடந்தது.

இந்த நிலையில், தேசிய காங்கிரசில் உதுமாலெப்பை ஓரங்கட்டப்பட்டமையினால் அவர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார். கடந்த காலங்களில் அவர் எமது கட்சிக்குச் செய்த அட்டூழியங்களையெல்லாம் நாங்கள் மன்னித்து, அவரை சேர்த்துக் கொண்டோம். ஆனாலும், தற்போதுவரை - அட்டாளைச்சேனையிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை ஓரங்கட்டுவதையும் அவர்களை அவமானப்படுத்துவதையும் உதுமாலெப்பை கைவிடவில்லை.

கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட உதுமாலெப்பைக்கு கட்சியின் மத்திய குழு எனும் வகையில் - நாம் முழுமையான ஆதவை வழங்கி, அவரின் வெற்றிக்காக உழைத்தோம். ஆனால், அவரின் வன்முறையாாலும், அவரின் பொய் வழக்குகளாலும் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட - முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளில் பலர், உதுமாலெப்பைக்கு மத்திய குழு ஆதரவளிக்கக் கூடாது என்று எங்களை வற்புறுத்தினார்கள். ஆனால், அதனையும் கடந்து உதுமாலெப்பைக்கு ஆதரவளித்து அவரை நாங்கள் எம்.பியாக்கினோம். இருந்தபோதும், மத்திய குழுவின் அந்த அர்ப்பணிப்பை கொச்சைப்படுத்தும் வகையில் உதுமாலெப்பை பேசியும், நடந்தும் வருகின்றார்.

முஸ்லிம் காங்கிரஸுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்த இந்தக் கட்சியின் மூத்த போராளிகளை ஓரங்கட்டிவிட்டு, தன்னுடன் தேசிய காங்கிரஸிலிருந்து வந்து முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தவர்களை - முஸ்லிம் காங்கிரஸுக்குள் முதன்மைப்படுத்துவதற்கு உதுமாலெப்பை முயற்சிக்கின்றார். அவ்வாறான அநியாயத்தை கட்சிக்குள் செய்வதற்கு அனுமதிக்க முடியாது. எமது கட்சிக்காக செய்யும் தியாகங்களைக் கொண்டே, கட்சிக்குள்ளிருக்கும் போராளிகளுக்கான 'இடம்' தீர்மானிக்கப்படுகிறது. எமது கட்சிக்காக சிறை வரை சென்று - தியாகங்களைப் புரிந்த எமது போராளிகள் புறமொதுக்கப்படுவதை நாம் அனுமதிக்க மாட்டோம்.
எனவே, உதுமாலெப்பையின் இவ்வாறான விருப்பங்களுக்கு நாங்கள் தடையாக இருப்பதாக அவர் கருதுவதால், எங்கள் மீது அவர் கடுமையான காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கின்றார். இதன் காரணமாகவே, சில தினங்களுக்கு முன்னர், எமது கட்சியின் அட்டாளைச்சேனை - தைக்கா நகர் வட்டார வேட்பாளரை ஆதரித்து நடந்த கூட்டமொன்றில் பேசிக் கொண்டிருந்த - கட்சியின் மூத்த போராளி கால்தீனை இடைநடுவில் உதுமாலெப்பை தடுத்து நிறுத்தினார். கால்தீன் என்பவர் எமது கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருமாக இருந்து மறைந்த மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் தம்பியாவர். எமது கட்சிக்காக கால்தீன் பெரும் தியாகங்களைச் செய்துள்ளார்.

இதன் போதுதான், அந்தக் கூட்டத்தின் ஏற்பாடு தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்திய உதுமாலெப்பை, என்னை மடையன் என்று பலர் மத்தியில் கூறியதோடு, என்னை நீ என்றும் பல தடவை கூறி, கிட்டத்தட்ட என்னை தாக்குவதற்கு முயற்சித்தார். இதனால், அந்த இடத்தில் கலவரம் ஏற்பட்டு விடுமோ என நான் அச்சமடைந்தேன்.

இந்தக் கூட்டத்துக்கு சமூகமளித்திருந்த எமது கட்சியின் மூத்த உறுப்பினரும் உயர்பீட உறுப்பினருமான எனது மாமா வாஹிட் அவர்களை - உதுமாலெப்பையுடன் வந்திருந்தவர்கள் மிக மோசமான வார்த்தைகளால் பேசினார்கள். இந்தச் சம்பவம் அவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

முன்னர் கட்சிக்கு வெளியிலிருந்து எங்கள் மீது கொடூரங்களைக் கட்டவிழ்த்து விட்ட உதுமாலெப்பை, இப்போது கட்சிக்குள் வந்தும் அதே வேலையைத்தான் செய்கிறார். இதனை கட்சியின் போராளிகள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை" என, மத்திய குழுத் தலைவர் ஹலீம் மேலும் தெரிவித்தார்.

No comments