ஏமாற்று கதைகளை நம்பி பொய்யான பிரச்சாரங்களுக்கு வாக்களிக்கும் மக்களாக மாளிகைக்காடு மக்கள் இல்லை : காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் ஜாஹீர்
நூருல் ஹுதா உமர்
இனவாதிகளின் கோர முகங்கள் வெளிப்பட்டபோது அவர்களின் சலுகைகளுக்காக சோரம் போனவர்கள் மத்தியில் மக்கள் தந்த அமானிதத்தை பொறுப்புடன் காத்து நிறைவான அபிவிருத்திகள் செய்த முஸ்லிம் சமூகத்தின் குரலாக இருந்த எங்களின் சமூகப்பணி மக்கள் மத்தியில் எப்போதும் நன்றியுடன் நினைவு கொள்ளப்படுகிறது என்பதனாலேயே மக்கள் எப்போதும் எங்களுடன் இணைந்து பயணிக்கிறார்கள் என்று காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும், காரைதீவு பிரதேச சபை சுயேட்சை குழு தலைமை வேட்பாளருமான ஏ.எம். ஜாஹீர் தெரிவித்தார்.
பிரதேச சமூக சேவகர்கள் ஒன்றிணைந்து காரைதீவு பிரதேச சபையில் தையல் இயந்திரம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள். அவர்களின் தேர்தல் செயற்பாட்டு காரியாலயம் மாளிகா வீதியில் திறந்து வைக்கப்பட்டது. மாளிகைக்காடு மேற்கு வேட்பாளர் எஸ். பஸ்லூன், பட்டியல் வேட்பாளர்கள் சகிதம் காரியாலயத்தை திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
திண்மக்கழிவகற்றி, தெருவிளக்குகளை பராமரித்து, வடிகான்களை சீரமைத்து பிரதேச சபைக்கு உரிய கடமைகளை செய்பவர்களாக மட்டும் இல்லாமல் கடந்த காலங்களில் நிறைய அரசியல்தலைவர்களின் உதவியை கொண்டு வந்து பிரதேச, இனவாத சிந்தனைகள் இல்லாமல் சகல பிரதேசங்களுக்கும் சேவையாற்றியுள்ளோம். பல ஏழைகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் நாங்கள் பக்கபலமாக இருந்துள்ளோம். இவற்றையெல்லாம் மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள்.
பழகி பார்த்து அரசியல் செய்யும் நேரத்தில் நாங்கள் இல்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மாளிகைக்காட்டின் அரசியல் தலைமைத்துவங்கள் எங்கள் அணியிலையே இருக்கிறது. படித்த மக்கள் முதல் பாமர மக்கள் வரை ஜனநாயக அரசியல் செய்பவர்கள் நாங்கள் என்பதை விளங்கிக் தபால் மூல வாக்கிலும் நிறைய வாக்குகளை எங்களுக்கு வழங்கியள்ளதாக அறிகிறோம். மே 06ம் திகதி மாலை எங்களின் வெற்றிச்செய்தியை மக்கள் அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு தெளிவாக இருக்கிறது.
ஏமாற்று கதைகளை நம்பி பொய்யான பிரச்சாரங்களுக்கு வாக்களிக்கும் மக்களாக மாளிகைக்காடு மக்கள் இல்லை என்பதை பல தடவைகளில் எங்களின் மக்கள் நிரூபித்துள்ளார்கள். இனியும் மக்கள் உண்மையின் பக்கமாக நின்று அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் சக்தி கொண்ட எங்களுடனே பயணிப்பார்கள் என்றார்.
No comments