"பழைய குருடி கதவை திறடி" கதைகளையெல்லாம் ஓரங்கட்டி மக்கள் நிதானமாக எங்களுக்கு வாக்களித்து மக்கள் வெல்ல வேண்டும் - தலைமை வேட்பாளர் எம்.ஏ. நளீர்
நூருல் ஹுதா உமர்
பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கல்விக்கு அரசாங்கம் கொடுக்கும் நிதிக்கு மேலதிகமாக தொண்டு நிறுவனங்களின் நிதிகளை கொண்டுவந்து நாவிதன்வெளி பிரதேச எல்லா பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்யவும், இருண்ட நிலையில் உள்ள நாவிதன்வெளி க்கு வெளிச்சம் பாய்ச்சவும் நாங்கள் பெற்றுக்கொள்ள போகும் வெற்றியிலையே மக்களின் எதிர்கால விடியல் தங்கியுள்ளது என நாவிதன்வெளி பிரதேச சபைக்கு கால்பந்து சின்னத்தில் சுயேட்சையாக தலைமை வேட்பாளராக போட்டியிடும் நளீர் பௌண்டஷன் நிறுவனர் எம்.ஏ. நளீர் தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேச சபை முதலாம் வட்டாரத்தில் நேற்று (19) வேட்பாளர் சித்தி சௌதியா தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், நாவிதன்வெளி பிரதேசத்தை இருண்ட பிரதேசமாக தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது. விவசாயிகளினதும், அரிசி ஆலைகளினதும் நட்சத்திர பிரதேசமாக திகழும் இந்த பிரதேசத்தில் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் அடங்களாக நிறைய மக்கள் படையெடுக்கும் பிரதேசம் இது. இந்த வளங்களை பயன்படுத்தி அவற்றை கொண்டு மக்களின் வாழ்வியலை மேம்படுத்த தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் வென்றால் மட்டுமே நிச்சயம் செய்வோம் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.
கடந்த காலங்களில் சர்வதேச உதவிகளை பெற்று நாவிதன்வெளி பிரதேச நிறைய உட்கட்டமைப்பை நாங்கள் செய்துள்ளோம். வீடமைப்பு, நீர் வழங்கல், மின்சாரம் வழங்கல், வாழ்வாதாரம் வழங்கல், உதவிகளை வழங்குதல் என நிறைய சேவைகளை அதிகாரம் இல்லாமலே செய்துள்ளோம். அதிகாரம் கிடைக்கும் போது உத்வேகத்துடன் நிறைய பணிகளை மக்களுக்கு செய்ய தயாராக இருக்கிறோம். "பழைய குருடி கதவை திறடி" கதைகளையெல்லாம் ஓரங்கட்டி மக்கள் நிதானமாக எங்களுக்கு வாக்களித்து மக்கள் வெல்ல வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் ஏ.கே. அப்துல் சமட், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம். சுவைதீன், நாவிதன்வெளி பிரதேச சபைக்கு கால்பந்து சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments