வைத்தியசாலை அமைப்பு விரைவில் டிஜிட்டல் மயமாகிறது!!
அரசாங்க வைத்தியசாலைகள் மக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவைகளை வழங்கும் வகையில் நாட்டின் பொது வைத்தியசாலை கட்டமைப்பு நவீனமயமாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் சுகாதார நிபுணர்களுக்கு தொழில் சார்ந்த திறனை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, பொரளை லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுகாதார தகவல் தொழில்நுட்ப அமைப்பை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வின் போது இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் வைத்தியசாலை கட்டமைப்பினை டிஜிட்டல் மயமாக்கி, குறுகிய காலத்தில் நாட்டு மக்களுக்கு தரமான, வினைத்திறனான சேவைகளை வழங்குவதுடன் உயர் மட்ட பராமரிப்பு, மற்றும் சிறந்த நவீன வசதி கொண்ட இடமாக வைத்தியசாலைகளை மாற்றுவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.
லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அனைத்து பிரிவுகளும் வார்ட்டுகள், வெளி நோயாளர் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவுகள், ஆய்வகங்கள் மற்றும் கதிரியக்கவியல் துறை ஆகியவை தற்போது முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு சிறந்த ஆய்வக சேவைகளை வழங்கும் நோக்கத்துடன், லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை ஆய்வகத்தின் ஹிஸ்டாலஜி பிரிவு இலங்கை அங்கீகார (SLAB) ஆய்வகங்களுக்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு விண்ணப்பித்தது. அந்தவகையில் அரசாங்க வைத்தியசாலையிலுள்ள ஒரு ஆய்வகம் அந்த அங்கீகாரம் பெறுவது இதுவே முதல் தடவையாகும் என அவர் தெரிவித்தார்.
No comments