Vettri

Breaking News

சம்மாந்துறை பிரதேச சபையில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக வானொலி பெட்டி - அடித்து கூறுகிறார் தலைமை வேட்பாளர் நஸார்




 பாறுக் ஷிஹான்


சம்மாந்துறை பிரதேச சபையில் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக வானொலி பெட்டி விளங்கும் என்று வருகின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் இப்பிரதேச சபைக்கு வானொலி பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிற சுயேச்சை குழு - 03 இன் தலைமை வேட்பாளர் சமூக சேவையாளர் எஸ். எல். ஏ. நஸார் தெரிவித்தார்.

இச்சுயேச்சை குழுவின் தேர்தல் அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (13) இரவு சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது. பேரணியாக வேட்பாளர்கள் வெடி ஆரவாரங்களுக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

சமய அனுட்டானங்களை தொடர்ந்து வேட்பாளர்கள் அறிமுகம் இடம்பெற்றது. தொடர்ந்து இச்சுயேச்சை குழுவின் பிரசார பீரங்கியும், சமூக, பொதுநல, அரசியல், ஊடக செயற்பாட்டாளருமான அஹமட் புர்கான் சிறப்புரை மேற்கொண்டார்.

பிற்பாடு சுயேச்சை குழு தலைவரும், தலைமை வேட்பாளருமான நஸார் பேசியபோது மேலும் தெரிவித்தவை வருமாறு

சம்மாந்துறை மண்ணும், மக்களும் இன்று ஏதிலிகளாக உள்ளார்கள். காரணம் கடந்த 30 வருடங்களாக காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட கட்சிக்காரர்கள் எமது மண்ணையும், மக்களையும் தொடர்ந்தேச்சையாக ஏமாற்றி வந்துள்ளார்கள். இனியும் ஏமாற்ற காத்திருக்கின்றார்கள்.

எமது மண் மாட்சி பெற வேண்டும். எமது மக்கள் மீட்சி பெற வேண்டும். அதற்கு காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட கட்சிக்காரர்களின் சூழ்ச்சிகளில் இருந்து விடுபட வேண்டி உள்ளது. ஆகவேதான் எமது மண்ணையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற சமூக நோக்கத்தை முன்னிறுத்தி பிரதேச சபைக்கு சுயேச்சையாக போட்டியிடுகின்றோம்.

சம்மாந்துறை தொகுதி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய கூடிய அளவுக்கு வாக்கு வலிமையை கொண்டது. ஆனால் சம்மாந்துறை தொகுதிக்கு அண்மைய காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்ச்சியாக கிடைப்பதாக இல்லை.

ஆனால் எமது மக்களின் வாக்குகளை வைத்து வேறு தொகுதிகளை சேர்ந்தவர்கள் எம். பிகளாக வருகின்றனர். அவர்கள் எமது மண்ணையும், மக்களையும் கண்டு கொள்வதே இல்லை. இந்த நிலை மாற வேண்டும். மாற்றம் ஒன்றே முன்னேற்றத்துக்கான வழி.

அந்த அரசியல்வாதிகள்தான் நாம் இன்று தேர்தல் கேட்பதற்கான காரணம் ஆவர். சம்மாந்துறை பிரதேச சபையில் இருந்து மாற்றம் உருவாக வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. சம்மாந்துறை பிரதேச சபையில் ஆட்சியை தீர்மானிக்கிற சக்தியாக வானொலி பெட்டி விளங்கும்.

 நாட்டு மக்கள் ஒருமித்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் திசைகாட்டிக்கு வாக்களித்தார்கள். அதே போல சம்மாந்துறை பிரதேச மக்கள் ஒருமித்து வானொலி பேட்டிக்கு வாக்களிக்கின்ற பட்சத்தில் எம்மால் பிரதேச சபையில் ஆட்சியை உருவாக்கி நடத்தவும் முடியும் என்றார்.






No comments