கருணா பிள்ளையான் போல் தேர்தலுக்கு பிறகு திசைகாட்டியும் திசை மாறும்! தமிழரசு வேட்பாளர் ஜெயசிறில் காட்டம்.
( வி.ரி.சகாதேவராஜா)
கருணா பிள்ளையான் போல் தேர்தலுக்கு பிறகு திசைகாட்டியும் சிதறி திசை மாறும். அவர்களை எமது பகுதியில் காணமுடியாது.எனவே அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்தேசியக்கட்சிகளுக்குமே ஆணை வழங்கவேண்டும்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் ,முன்னாள் தவிசாளரும், இந்நாள் வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சூளுரைத்தார்.
அவரது வட்டாரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற முதலாவது மக்கள் சந்திப்பில் பேசியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வேட்பாளர் கி.ஜெயசிறில் மேலும் தெரிவிக்கையில்
தொடர்ச்சியாக இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றி வருகின்றது. இம்முறையும் இலங்கை தமிழரசுக் கட்சியே காரைதீவு பிரதேச சபையில் ஆட்சி அமைக்கும்.
எமது மக்களை எமது மக்கள்தான் ஆள வேண்டும். எமது மண்ணை மாற்றானுக்கு தாரை வார்க்க முடியாது.
எமது மண்ணை மாற்றானிடம் தாரை வார்க்க இன்று சில கோடரிக் காம்புகள் தலைப்பட்டுள்ளனர். மருந்துக்கும் பொதுச் சேவை சமூக சேவை செய்யாதவர்கள் இவர்கள். மாற்றமாம்! அபிவிருத்தியாம்!
இதை நம்பி வாக்களிக்க தமிழன் ஒன்றும் கேணயன் அல்ல.
அவர்களது வரலாற்றை நாம் நன்கறிவோம். இந்த நாட்டில் தமிழன் இன்று உரிமையற்று வடகிழக்கு பிரிக்கப்பட்டு நாதியற்ற சமூகமாக மாறுவதற்கு மூலவிசையாக செயற்பட்டவர்கள் இந்த சிவப்பு அணியினரே.
எந்த மானமுள்ள ரோசமுள்ள தமிழனும் இதற்குப் பின்னால் போக மாட்டான்.
இந்த மண்ணை அபகரிக்க பயன்படுத்தப்படும் ஏவல் பேய்களே இன்றைய பெரும்பான்மைக்கட்சி வேட்பாளர்கள்.
இவர்களை ஊருக்குள் எந்த பொது வேலைத்திட்டங்களில் என்றுமே கண்டதில்லை. தேர்தலுக்கு பின்னர் இவர்கள் தலைமறைவாகி விடுவார்கள்.
காரைதீவு என்றும் தமிழரசின் பக்கமே. ஏன் என்றால் இங்கு உண்மையான உணர்வுள்ள தமிழர்கள் இருக்கின்றார்கள்.
எம்மினத்தின் அடையாளம் எமக்கான இருப்பு தமிழ்தேசிய அரசியலே. இதற்காகவே மக்கள் ஆணைவழங்கினார்கள் இனியும் வழங்குவார்கள்
இன்று எம்மக்களில் சிலர்மாற்றத்திற்காக வாக்களித்துப்பெற்ற பெரும்பான்மை கட்சிகளில் தமிழ் பிரதிநிதிகள் கண்ணிருந்தும் குருடர்களாகவும் வாய்பேசாப்பொம்மைகளாகவும் காணப்படுகின்றார்கள். இது எம்மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தினை தந்துள்ளது.
அன்று எம்மக்களினை திசைதிருப்பி அபிவிருத்தி அரசியல் எனும் மாயையினை காட்டி சில எலும்புத்துண்டுகளின் பின்னால் சென்ற அரசியல் மேதாவிகள் இன்று அரசியல் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பின்னால் சென்ற ஒருசில மக்களும் இன்று தெளிவடைந்து தமிழ்தேசிய அரசியலை ஏற்று எமக்கான பாராளுமன்ற பிரதித்துவத்தினை அம்பாறையில் கௌரவமாக வென்றெடுத்துள்ளார்கள்.
இன்றைய அம்பாறை தமிழரது ஒற்றுமையினை சீர்குலைத்து இங்கு எமது அடையாளத்தை அழிக்க மாற்றினக்கட்சிகள் எமக்கெதிரான மிகவும் சூட்சுமமான வியூகங்களினை அமைக்கிறார்கள் இவர்களது நிகழ்ச்சிநிரலுக்காக எம்மினத்தில் சில கைக்கூலிகள் இவர்களது முகவர்களாக செயல்படுகின்றார்கள்.
அதைதவிர்க்க பலமான அஸ்திவாரம் அமையவேண்டுமாயின் உள்ளூராட்சி சபைகளினை நாங்கள் வென்றெடுக்க சத்தியமானதும் சாத்தியமானதுமான வழி எம்மக்கள் தமிழரசுக்கட்சிக்கு ஆணைவழங்கி தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக தமிழரின் ஆதிக்கத்திற்குட்பட்ட அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்க வேண்டும்.
No comments