Vettri

Breaking News

ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பமான ஶ்ரீ தலதா வழிபாடு இராஜதந்திரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்பு!!







இலங்கையிலுள்ள பொதுமக்கள் தங்கள் கண்களால் புத்தரின் புனித தந்தத்தை தரிசித்து வழிபடும் வாய்ப்பை வழங்கும் வகையில் 16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் “ஶ்ரீ தலதா வழிபாடு” இன்று (18) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் ஆரம்பித்தது.


அதன் ஆரம்ப நிகழ்வைக் குறிக்கும் வகையில், முதலில் ஜனாதிபதி “தலதா” புனித தந்தத்தை தரிசித்து மலர் வைத்து வழிபட்டார். அதன் பின்னர் பக்தர்களுக்கு புனித தந்தத்தை தரிசிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையில் “ஶ்ரீ தலதா வழிபாடு” ஆரம்பித்தது.


ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி தேரர்களின் அனுசாசனத்துடனும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட “ஶ்ரீ தலதா வழிபாடு” இன்று முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும்.


ஆரம்ப நாளான இன்று (18) புனித தந்தத்தை வழிபட நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்தனர்.


இன்று மாலை 5.00 மணி வரையிலும், பக்தர்களுக்கு “தலதா” புனித தந்தத்தை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், நாளை (19) முதல் தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும்.


புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் ஏனைய அமைச்சர்கள், வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பலஸ்தீன், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, ஜப்பான், பிரித்தானியா, தாய்லாந்து, கனடா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் உள்ளிட்ட இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments