Vettri

Breaking News

எரிபொருள் விலை திருத்தத்தில் அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது - திஸ்ஸ அத்தநாயக்க




 உலக சந்தையில் பாரியளவில் எரிபொருள் விலைகள் குறைவடைந்துள்ள போதிலும், இங்கு 10 ரூபாய் மாத்திரமே குறைக்கப்பட்டுள்ளது.  நடைமுறையிலுள்ள விலை சூத்திரத்துக்கமைய விலைகள் குறைக்கப்படவில்லை. எரிபொருள் விலை திருத்தத்தில் அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் பாரியளவில் குறைவடைந்துள்ளன. அவ்வாறிருக்கையில் இலங்கையில் 10 ரூபாவால் மாத்திரமே விலை குறைக்கப்பட்டுள்ளது.

நடைமுறையிலுள்ள விலை சூத்திரத்துக்கமைய விலைகள் குறைக்கப்படவில்லை. பெற்றோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், வறுமை நிலையிலுள்ள பெருந்தோட்ட மக்கள் போன்றோர் அதிகளவில் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலைகள் குறைக்கப்படவில்லை.

10 ரூபாவால் விலைகளைக் குறைத்து விட்டு அதனை பெருமையாகக் கூறுகின்றனர். எந்த சூத்திரத்தின் அடிப்படையில் இந்த விலை குறைப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன? கடந்த இரண்டு மாதங்களில் எரிபொருட்களின் விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சியடைந்த போதிலும, நாட்டில் அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. 10 ரூபாய் விலை குறைப்பை எந்த வகையிலும் மக்களால் அனுபவிக்க முடியாது.

6 மாதங்களில் நாட்டை மாற்றிக் காட்டுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் கூறியதைப் போன்று எந்தவொரு மாற்றமும் இடம்பெறவில்லை. எனவே இனியும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக அவர் கூறும் கற்பனைக் கதைகளை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. எனவே உள்ளுராட்சிமன்றங்களின் அதிகாரங்களை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப் போவதில்லை.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் என்ற யோசனை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் முன்வைக்கப்பட்டது. எனினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வேலைப்பளு காரணமாக அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. எனவே தேர்தலின் பின்னர் மீண்டும் இது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றார்.


No comments