தன்னை ஜனாதிபதியாக இன்னும் உணர்ந்து கொள்ளாத ஜனாதிபதி : முன்னாள் தவிசாளர் ரனூஸ் இஸ்மாயில்
நூருல் ஹுதா உமர்
அச்சுறுத்தி வாக்கு கேட்பதும் வாக்கு போட வேண்டாம் என்று சொல்வதும் பாரதூரமான குற்றம். பிள்ளையானை அரசியல் உள்நோக்கத்துடன் கைது செய்திருந்தால் அதுவும் குற்றம். ஜனாதிபதியின் உரைகள் சொல்ல வருவது என்ன? ஊழல், வன்முறை, குற்றம் இவைகளை தடுப்பதற்கும் சீர் செய்வதற்கும் சட்டங்கள் இருக்கிறது. சட்டம் ஒழுங்கை நிறைவேற்றக்கூடிய நிறுவனங்களை சரியாக இயக்கினால் இந்த குற்றம் ஊழல் வன்முறை மற்றும் அனைத்து விதமான சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் நிர்வாக சீர்கேடுகள் இவைகள் எல்லாவற்றையும் நிவர்த்திக்க முடியும். இதுதான் உண்மையான முறைமை மாற்றம். சிஸ்டம் சேஞ்ச் என சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை முன்னாள் தலைவருமான ரனூஸ் இஸ்மாயில் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும், ஜனாதிபதியின் அண்மைய கிழக்கு மாகாண விஜயத்தின் போது அவர் ஆற்றிய உரைகள் முறைமை மாற்றத்தை ஏற்படுத்த கூடிய தகைமை இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறதா எனும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாரிய சமூக அழுத்தங்களுக்கு மத்தியில் பிணையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கும் ருஷ்டியின் கைது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் ஜனாதிபதி சொன்ன விளக்கம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அவருடைய விரைவான பிணை விடுதலையும் அவரை கைது செய்ததற்கான காரணமும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற மிகவும் கடுமையான கொடூரமான சட்டம் ஒன்றை பயன்படுத்தி அவரை கைது செய்திருக்க தேவையில்லை எனும் நியாயமான விடயத்தை சட்டம் தெரிந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.
மட்டக்களப்பில் ஜனாதிபதி உரையாற்றுகின்ற பொழுது மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்காவிட்டால் மத்திய அரசாங்கத்தில் இருந்து அபிவிருத்திக்கான நிதிகளை ஒதுக்க மாட்டோம் என்றும் நாங்கள் இப்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறோம் குறிப்பாக நாங்கள் ஒரு கைதை (இங்கே இவர் மறைமுகமாக முன்னாள் அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்று அழைக்கப்படும் பிள்ளையான் என்பவருடைய கைதைத்தான் கூறினார்) செய்திருக்கிறோம் என்று கூறினார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் பிள்ளையான் அவர்களுடைய கைதுக்கும் மட்டக்களப்பு மாநகர சபை வெற்றிக்கும் ஒரு நாட்டின் ஜனாதிபதி இவ்வாறு தொடர்புறுத்தி பேசியது கொஞ்சமும் நாகரீகம் அல்ல. பிள்ளையான் அவர்களுடைய கைது ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை ஜனாதிபதி தெளிவாகவே கூறியிருக்கிறார். எங்களுக்கு வாக்களியுங்கள் என்று வாக்கு கேட்பது ஜனநாயகம் ஆனால் இன்னும் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு வாக்களித்தால் அரசாங்கமாக நாம் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறி விடுவோம் என்று அச்சுறுத்தி வாக்களிக்காமல் தடை செய்வதும் ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மிகவும் பிழையானது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது இந்த நாட்டு மக்கள் வைத்த மிகப்பெரிய நம்பிக்கை காப்பாற்றப்பட வேண்டும் என்பதே எனது அவா.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் ஜனாதிபதியின் அதிகாரம் இருக்கும் போது எதிர்க்கட்சி போன்று இன்னும் குறை கூறிக்கொண்டு குற்றம் கூறிக்கொண்டும் இருக்காமல் காரியத்தை முன்னிறுத்தி வாக்கு கேட்பது இந்த அரசாங்கத்திற்கு ஆரோக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.
No comments