Vettri

Breaking News

பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த நிலையில் தமிழர்கள் உள்ளூராட்சி தேர்தலில் தமிழர்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்கக் வேண்டாம்!! காரைதீவில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் முழக்கம் .




 ( வி.ரி.சகாதேவராஜா)


பட்டுவேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த நிலை தான் இன்று  ஈழத்தமிழர்களின் நிலை. நீலமும் பச்சையும் மாறி மாறி ஏமாற்றிய காலம் போய், இன்று சிவப்பும் ஏமாற்ற புறப்பட்டிருக்கிறது . எனவே எந்தக்காரணம் கொண்டும் தென்னிலங்கை பேரினவாத கட்சிகளுக்கு தமிழர்கள் ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது.

இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும்,  பாராளுமன்ற குழுத்தலைவருமான முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார் .

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எமக்கு பாதுகாப்பு இல்லை ; வாகனம் இல்லை ; ஏன் ஆறுதல் பரிசாக இருக்கக்கூடிய 10 மில்லியன் ரூபாய் வரவு செலவுத் திட்ட நிதி கூட இல்லை.  இதுதான் எமது சமகால நிலைவரம் என்றார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..

 கடந்த ஆறு மாத காலத்தில் தாங்கள் யார் என்பதனை இன்றைய அரசாங்கம் தெட்டத்தெளிவாக காட்டி இருக்கின்றது. இனியும் அவர்களை நம்ப முடியுமா? 

கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் நீலம் பச்சை கட்சிகளில் வெறுப்படைந்த தமிழர்கள் ஏதோ ஒரு வகையில் சிவப்பு கட்சிக்கு வாக்களித்தார்கள். ஆனால் அந்த சிவப்பு கட்சி இன்று தமிழர்களை 100% ஏமாற்றி வருவதனை நீங்கள் அறிய வேண்டும்.

உதாரணமாக அவர்கள் கொண்டு வந்த கிளின் ஸ்ரீலங்கா இலங்கை சுத்தப்படுத்தும் திட்டத்தில் 18 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதில் ஒருவர் ஆவது தமிழர் இல்லை.
 பல்லின நாடு என்கின்றார்கள். நாங்கள் இனவாத மதவாதமற்ற  பேதமற்ற அரசாங்கம் என்கிறார்கள் .
ஆனால் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் ஆறு அரச தமிழ் எம்பிக்களை வைத்துக்கொண்டு இப்படியான இனவாதத்தை செய்கிறார்கள்.

 இதேபோன்று பரீட்சைகளை மேற்பார்வை செய்யும் குழுவிலே 7 பேரை நியமித்தார்கள் . அதில் அறுவர் சிங்களவர் ஒருவர் முஸ்லிம் அதில் கூட ஒரு தமிழரும் இல்லை .
மயிலந்தனை  மாதவனை மேய்ச்சல் தரைப்பிரதேசத்தை பொலநறுவை அம்பாறை சிங்கள மக்கள் சட்ட விரோதமாக குடியேறி இருக்கின்றார்கள் அவர்கள் வெளியேற வேண்டும் என்று நீதிமன்றம் கூறிய பொழுதும் தொடர்ந்து வரும் ஆட்சியாளர்கள் அதனை கவனத்தில் எடுக்கவில்லை.

 அதேபோன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்திலும் இதே நிலைமைதான் .

கிழக்கு பல்கலைக்கழக உயர் பீட பேரவையிலே  15 பேர் இருக்கின்றார்கள். அப்போது இதே பேரவையில் 9 தமிழர்கள் நான்கு முஸ்லிம்கள் இரண்டு சிங்களவர்கள் இருந்தார்கள் .
ஆனால் இந்த அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட பேரவையில் ஏழு சிங்களவர்கள் ஐந்து தமிழர்கள் மூன்று முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.
 இதை பிரதமரிடம் நாங்கள் நேரடியாக கேட்டோம். இது தேசிய பல்கலைக்கழகம் எனவே தேசிய மட்டத்தில் தான் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

அப்படி என்றால் தென் இலங்கையில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களில் ஒருவராவது தமிழர் உறுப்பினராக இருக்கின்றாரா? என்று கேட்க விரும்புகின்றோம். இல்லை .

மொத்தத்தில் மாறி மாறி வந்த நீலம் பச்சை அரசாங்கங்கள் நாகப்பாம்பு புடையன் பாம்பு போன்று சீறிச்சத்தம் போட்டு துவேசத்தை காட்டியது .
ஆனால் இந்த அரசாங்கம் வழலைப்பாம்பு போல சத்தம் இல்லாமல் இனவாதத்தை கக்குகின்றது . கடிக்கிறது.

இதுவரை நாங்கள் சில பாடங்களை கற்கின்றோம் .

நாம் ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்றத் தேர்தலில் ஏதோ அவர்களை ஆதரித்தோம் .
ஆனால் உள்ளூராட்சி மன்றத்தில் அப்படி ஆதரித்தால் எமது அடையாளமே இல்லாமல் போகும்.

 சில வேளை உள்ளூராட்சி தேர்தலிலும் இந்த சிவப்புக்கட்சி வெற்றி பெறுமாக இருந்தால் மூன்று தேர்தல்களிலும் தமிழர்கள் எமக்கு ஆதரவளித்து இருக்கின்றார்கள் என்று கூறி மேலும் ஏறி மிதிக்க வருவார்கள்.
நாளை  நாங்கள் ஒன்றுமே கேட்க முடியாது . சுயநிர்ணய உரிமையை கேட்க முடியாது. வடகிழக்கு இணைப்பை கேட்க முடியாது . சுயாட்சியை கேட்க முடியாது. ஏன் தாயகம் ஒன்று சொல்லையே பயன்படுத்த முடியாது போகலாம் .எனவே சிந்தித்து செயல்பட வேண்டும்.

தேர்தல் என்றால் பணம் வரும்  பானம் வரும் . உருண்டை வரும் , சப்பட்டை வரும்.
ஆனால் எமது அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படும்.

 பேரினவாதிகளுக்கு கூஜா தூக்கும் ரோஹனவின் பெறாமக்கள் சிவப்பு நிற சேர்ட்காரர்கள் வருவார்கள் . அபிவிருத்தி என்பார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பார்கள். வேலை தருகிறோம் என்பார்கள். இந்த மாயைகளுக்கு பசப்பு வார்த்தைகளுக்கு 
மயங்கி விட வேண்டாம். மயங்கினால் கட்டியிருந்த கோவணத்தையும் இழந்து அம்மணமாக நடுத்தெருவில் நிற்க வேண்டி வரும்.

1949 இல் தந்தை செல்வா ஆரம்பித்த, தமிழ் மக்களுக்கு என்று இருக்கின்ற ஒரே ஒரு கட்சியான தமிழரசுக்கட்சிக்கு 100% வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் எமது இனத்தின் தனித்துவம் பேணப்படும். இங்கு அதை எல்லாம் நான் கூற வேண்டிய அவசியம் இல்லை அனைத்தும் தெரிந்தவர்கள் காரைதீவு மக்கள்.

கடந்த ஆறு மாத கால பரீட்சையில் நாங்கள் புதிய அரசாங்கத்தை நம்பி ஏமாந்தோம். இன்னும் நான்கு வருடங்கள் ஆறு மாதங்கள் இருக்கின்றன.
 அதிலும் ஏமாறப் போகின்றோமா?  எனவே சிந்தித்து தமிழரசுக் கட்சிக்கு மாத்திரம் வாக்களியுங்கள். என்றார்.



No comments