அரசியலில் நான் பொய் சொல்லி உழைப்பதற்காக வரவில்லை; மக்களுக்கான எனது சேவை தொடரும்!! என்கிறார் திருக்கோவில் சுயேட்சை தலைமை வேட்பாளர் சசிகுமார்
( வி.ரி.சகாதேவராஜா)
அரசியலில் நான் உழைப்பதற்காகவோ, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதற்காகவோ வரவில்லை. என்னிடம் இருக்கும் பணத்திலே பல சேவைகளைச் செய்து வருகின்றேன். அது தொடரும்.
இவ்வாறு திருக்கோவில் பிரதேச சபைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழு (வண்டில் சின்னம்) தலைமை வேட்பாளர் பிரபல சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபருமான சுந்தரலிங்கம் சசிகுமார் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் மற்றும் திருக்கோவில் ஆகிய இடங்களில் நேற்று (6) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்
அங்கு மேலும் தெரிவிக்கையில்..
திருக்கோவில் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமையவே இத் தேர்தலில் களம் இறங்கியுள்ளேன். என் அரசியல் வருகையை தாங்கிக்கொள்ள முடியாத சில அரசியல்வாதிகள் எனக்கெதிராக பல பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். நாம் யாரையும் விமர்சிக்கப் போவதில்லை. எம்மால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை முன்வைத்தே வாக்கு கேட்கின்றோம். எமது சேவையை பற்றி அறிந்த பிரதேச மக்களே எம்மை களம் இறக்கியுள்ளனர்.இம்முறை நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் திருக்கோவில் பிரதேச சபையை எமது சுயேட்சை குழுவான வண்டில் சின்னம் கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இங்குள்ள பத்து வட்டாரத்திலும் எமது சுயேட்சை குழு அமோக வெற்றி பெறும்.
எமது பிரதேச மக்கள் மாற்றம் ஒன்றை வேண்டி நிற்கின்றனர். அதனாலே மக்கள் வண்டில் சின்னத்திற்கு பின்னால் ஒரணியில் திரண்டுள்ளனர். இதனைக்கண்டு பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு பயம்பிடித்து விட்டது. இன்று மாற்றத்தை வேண்டிநிற்கும் மக்களின் தெரிவாக வண்டில் சின்னம் திகழ்கிறது. திருக்கோவில் பிரதேச சபையை லஞ்சம் ஊழலற்ற சபையாக கட்டியெழுப்புவோம்.
திருக்கோவில் பிரதேசத்தை அபிவிருத்தி அடைந்த பிரதேசமாக கட்டியெழுப்புவதே எனது நோக்கமாகும்.
கடந்த காலங்களில் இப் பிரதேசத்தில் இருந்து எந்தவொரு உற்பத்தி பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படவில்லை. நாம் இப் பிரதேசத்தில் ஏற்றுமதி பொருட்களை உற்பத்தி செய்து பல தொழில் முயற்சியாளர்களை உருவாக்கவுள்ளோம்.
திருக்கோவில் பிரதேசம் நீர்வளம், நிலவளம், வயல்வளம், மலைவளம், இயற்கை வளம் கொண்டதாகும். இங்கிருந்து மீன், இறால் வளர்ப்பில் ஈடுபட்டு அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளோம். இதேபோல் இங்கு நில வளம் உள்ளது. இந் நில வளத்தை உச்சளவில் பயன்படுத்தி பப்பாசி, முருங்கை செய்கையினை ஊக்குவிக்கவுள்ளோம். உற்பத்தி செய்யப்படும் இவைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஏற்றுமதி வருமானத்தை பெறுவதே எனது நோக்கமாகும்.
அத்துடன் எமது பிரதேசத்தில் மூடப்பட்டுள்ள ஆடைத் தொழில்சாலைகளை மீள திறந்து இங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்கும் நான் ஆயுத்தமாக இருக்கிறேன். அதுமட்டுமின்றி பிரதேசத்தின் மலை வளத்தை பயன்படுத்தி எமது பிரதேச கடலரிப்பை தடுப்பதற்கு முழு மூச்சாக பாடுபடுவேன். மேலும் இளைஞர், யுவதிகள், மாணவர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் குறிப்பாக நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் நீச்சல் தடாகம் அமைக்கப்படும். சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும்.
திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்கள் உல்லாச பயணிகளை கவரக்கூடிய அழகிய பிரதேசமாகும். இங்கு இயற்கையான சிறு சிறு தீவுகளும் உள்ளன. இவற்றை மேம்படுத்தி வெளிநாட்டு சுற்றுலா பயணத்துறையை கட்டியெழுப்புவதற்கும், வெளி நாட்டு வருவாயை மீட்டெடுப்பதற்கும் காத்திருக்கின்றேன். என தெரிவித்தார்.
ஏனைய வேட்பாளர்களும் பெருந்தொகையான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments