Vettri

Breaking News

கட்சிகளுக்கிடையிலான மோதலின் எதிரொலி-6 பேர் சரீரப்பிணை -சம்மாந்துறையில் சம்பவம்.!!





 ( வி.ரி.சகாதேவராஜா)

 சம்மாந்துறையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட 6 சந்தேக நபர்கள் பிணையில் செல்ல சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்  பகுதியில்  ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர்  காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார வேட்பாளர் உட்பட ஆறு பேர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் புதன்கிழமை (16)   சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது சந்தேக நபர்களை தலா ரூபா 50 ஆயிரம் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் குறித்த வழக்கு தவணையை எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆந் திகதி ஒத்திவைத்தார்.

செவ்வாய்க்கிழமை(15) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன்  காயமடைந்து வைத் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  தேசிய காங்கிரஸின் வீரமுனை  வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீலை  தேசிய காங்கிரஸ்  தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ தினத்தன்று  முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வருகை தந்து சென்ற பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உட்பட ஆதரவாளர்களால்  வீரமுனை  வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீல் உட்பட அவரது ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு  உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்  தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் அம்பாறை மாவட்டத்தின் முதலாவது தேர்தல் வன்முறை சம்பவமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments