40 ஆண்டு கால நிர்வாக சேவையில் ஜனரஞ்சகம் கொண்டவர் கோபாலரத்தினம்
ஆட்டம்..., பாட்டம்...கொண்டாட்டம்...!
அரசு நிர்வாக சேவை அதிகாரி ஒருவரின் புதுமை புகுத்தலை கண்டு வியந்து போனவர்கள் ஏராளம். நிர்வாகம் என்பது ஆற்றல் வாய்ந்த பெருங்கலை என்பதை நிரூபித்தவர் தம்பி மூத்ததம்பி கோபாலரத்தினம்.
40 ஆண்டுகாலம் அரச நிர்வாகப் பணியை கட்டி இழுப்பது என்பது இலகுவான காரியம் அல்ல. கல்லில் நார் உரிக்கும் சாதனைப் பயணம் அது. தொழிற்சங்கப் போராட்டங்கள் ; இனங்களின் அதிகாரப் போட்டிகள் ; ஊழியர்களின் பதவிகளுக்கான கயிறு இழுப்புகள்...... உட்பட சகல முரண்பாடுகளையும் மென்போக்கில் கையாண்டு நிர்வாக கட்டமைப்புகளில் சுமூகநிலையை ஏற்படுத்தி - சமூக நன்மதிப்பை தனதாக்கிக் கொண்டவர் கோபாலரத்தினம்.
"நிர்வாகி என்பவர் ஒரு நிபுணரை விடவும் அதிக ஆற்றல் வாய்ந்த பாத்திரமாகும். ஒரு நிறுவனத்தை ( அரசு / தனியார் ) சீரிய வழியில் வழி நடத்தும் முக்கிய பொறுப்பு நிர்வாக அதிகாரியிலேயே தங்கி இருக்கிறது.அவர்கள் பொதுவாக தகவல்தொடர்பு, அதிகாரத்துவம், சட்டப்பூர்வத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் சிக்கல்களை நிர்வாக அதிகாரிகளே கையாளுகிறார்கள்." இவ்வாறு மேற்குலக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த வரையறைகளுக்கும் அப்பால், தன்னை அர்ப்பணித்து ஈடுபடுத்திக் கொண்ட முழுமையான ஓர் அதிகாரியாக திகழ்ந்தவர் கோபாலரத்தினம்.. பட்டதாரி கற்கையை பூர்த்தி செய்து, ஆசிரியர் துறைக்குள் புகுந்த இவர், இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் ( SLAS ) முதன்மை தரத்தில் சித்தி அடைந்தவர்.
கிழக்கு மாகாணத்தில் - குச்சவெளி, நாவிதன்வெளி, களுவாஞ்சிக்குடி, திருக்கோயில் உட்பட பல்வேறு பிரதேச செயலகங்களில் தலைமைப் பொறுப்பை ஏற்ற அவர்,நிர்வாக நடைமுறைகளில் புதுமைகளைப் புகுத்திய பெருமைக்குரியவர்.
நிர்வாகத்தை பொறுப்பேற்று உயர் அதிகாரியாக இவர் பணிபுரிந்த பிரதேச செயலகங்களில் எல்லாம், சிக்கலில் இருந்த மக்கள் பிரச்சினைகள் அனைத்துக்கும் சுமுகமாக தீர்வு காணப்பட்ட விதம் , பொது நிர்வாக அமைச்சுக்கே ஆச்சரியம் அளித்தது.
அம்பாறை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக இவர் பணியாற்றிய காலம் அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியின் பொற்காலம் என்று கூறுவதில் மிகையில்லை. இவருடைய நிர்வாகத் திறமைக்கு நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தலை சிறந்த நிர்வாக அதிகாரி ஒருவருக்கு, மாவட்ட நிர்வாக பொறுப்பு ஒன்று வழங்கப்படவில்லை என்பது பெரும் குறையாகவே என்னால் பார்க்க முடிகிறது. இதற்கு அரசியலின் கோரக்கரங்களும் அதன் சித்து விளையாட்டுக்களும் பின்புலம் என்பதை நான் அறிவேன்.என்றாலும், இலங்கையின் திறைசேரியின் மேலதிக பணிப்பாளராக கோபாலரத்தினம் நியமனம் பெற்ற போது, இலங்கை திருநாட்டின் தேசிய நிதி நிர்வாகத்திலும் தான் யார் என்பதை அடையாளப்படுத்தியவர். திறைசேரி என்பது மத்திய வங்கியின் கீழ் செயல்படும் நிதிக் கட்டமைப்பை கையாளும் பிரிவு.
இதேபோல, கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் பல்வேறு பொறுப்புகளை சுமந்தவர் கோபாலரத்தினம். இவரது திறமை கண்ட கிழக்கு மாகாண ஆளுநர்கள் - திருமதி அனுராதா ஜஹம்பதி , செந்தில் தொண்டமான், தற்போதைய ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஆகியோர் மாகாண சபையின் பேரவை செயலாளர் பொறுப்பு உட்பட பல்வேறு உச்ச பொறுப்புகளை இவரிடம் கையளித்திருந்ததானது, நிர்வாக திறமைக்கு கிடைத்த நற்சான்றுகளாகவே நம்மால் பார்க்க முடியும். மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய இவர், கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக கடமை ஏற்று தீர்க்க முடியாமல் காலம் காலமாக இழுபட்டு வந்த பிரச்சனைகளுக்கெல்லாம் நேர்த்தியான தீர்வுகளை கண்டார் என்பதை நான் அறிவேன்.
உண்மையில், நிர்வாக விடையங்களை கையாளுவதில் இலங்கையில் ஒரு புதுமையான அதிகாரியாகவே இவரை அடையாளம் காண முடிகிறது. நிர்வாகத்தை முதன்மைப்படுத்தி செயல்படும் ஒருவருக்கு personality - தனித் தன்மையான பண்பு இருக்க வேண்டும். இதனை குண நலனோடு சேர்ந்த ஆளுமை என்று கூட கூறலாம். திரு.கோபாலரத்தினத்திடம் இந்த முழுமையை நான் கண்டேன்.
முத்துப்பல் தெரியும் அவரது சிரிப்பும், முறுக்கி விடப்படாத மீசைக்கட்டும், ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் வசீகர தோற்றமும் இவரது திறன் விருத்திக்கு பக்கபலம் சேர்த்தது. இன்னும் ஒரு விடயத்தையும் இவரிடம் கண்டேன். பிரித்தாளும் தந்திரத்தால் - Divide and Rule - எதனையும் சாதிக்க முடியாது என்பதை நிரூபித்து இருப்பவர் கோபாலரத்தினம். அலுவலகப் பணியாளர்களை எல்லாம் தன்னுடைய அரவணைப்பால் வெற்றி கொண்டு, திறன் அபிவிருத்தியை நிரூபணமாக்கி இருப்பவரும் இவர்தான்.
அதிகாரிகளையும் அலுவலகப் பணியாளர்களையும் மகிழ்ச்சியோடு வழிநடத்துகின்ற திறமை இவருக்கே உரித்தானது.
ஒன்று கூடல்கள் , ஆட்டம்.. பாட்டம்... மகிழ்ச்சி... என்பது இவரது சாமர்த்தியமான அணுகுமுறை. பாடுவதிலும் ஆடுவதிலும் இவரும் ஒரு வல்லவர் என்பதை ஊழியர்களோடு சேர்ந்தே தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ளும் சிறந்த பண்பை
இவரிடந்தான் காண முடியும்.
தன்னோடு பணியாற்றும் ஊழியர்களின் அடியாழத்தை தேடி வீடு சென்று, ஊழியர் நலம் பேணுவதில் இவருக்கு நிகர் இவர்தான். இப்படி ஒரு நிர்வாக அதிகாரியை நான் இலங்கையில் கண்டதே இல்லை.
ஊழியர்களை பிரித்தாளும் தந்திரத்தை அடியோடு ஒதிக்கித் தள்ளிவிட்டு - அவர்களோடு அவர்களாக இருந்து பணிகளை செய்யும் அணுகுமுறை, சாத்தியமானது என்பதை நிரூபித்து காட்டியிருக்கும் தம்பி கோபாலரத்தினம் இலங்கை நிர்வாக சேவைக்கு சிறந்ததொரு உதாரண புருஷர். தலை சிறந்த ஒரு நிர்வாக அதிகாரியின் சமூகப் பணி தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
க.குணராசா.
தினகரன் -வாரமஞ்சரி, 'ஒருவன்' பத்திரிகைகளின்
முன்னாள் பிரதம ஆசிரியர்
No comments