தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நூலக கணனிமயப்படுத்தல் (Library Automation ) குறித்த பயிற்சி அமர்வு!!
இலங்கையின் தென்கிழக்கு பிராந்தியத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொது நூலகங்கள், கல்விக்கல்லூரி, பாடசாலை, தொழில்நுட்ப கல்லூரி போன்ற நூலகங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற தூரநோக்கில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் அனுமதியுடன் பல்கலைக்கழக நூலகா் எம்.எம் றிபாஉதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழக சிரேஸ்ட உதவி நூலகர்கள் மற்றும் நூலக உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் கடந்த மூண்று வருடங்களுக்கு முன் தென்கிழக்கு பிராந்திய நூலக தகவல் வலையமைப்பு (SERLIN) என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் அவர்களுக்கான ஒத்துழைப்பு, பயிற்சி மற்றும் வளப் பகிர்வை மேம்படுத்தல் போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் ஒரு கட்டமாக VuFind USA, HealthNet Nepal ஆகியவற்றுடன் SEUSL நூலகம் இணைந்து எதிர்வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் நிகழ்நிலை (Online) ஊடாகவும் ஜூன் மாதம் பல்கலைக்கழக நூலகத்தில் நேரடியாகவும் இடம்பெறயிருக்கின்ற KOHA நூலக மேலாண்மை அமைப்பில் பயிற்சி , செயல்படுத்தலை உள்ளூர் அமைப்புகளினதும், சர்வதேச வளவாளர்களின் புகழ்பெற்ற குழுவினருடைய ஆதரவுடனும் பயிற்சி அமர்வுகளை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் உள்ள பொது நூலகங்களை இணைத்து அந்த நூலகங்களை KOHA தரவுத்தளத்தினை பயன்படுத்தி முழுமையாக கணனிமயப்படுத்தல் , நூலக ஊழியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கல் மற்றும் அதற்கு தேவையான வளங்களை பெற்றுக்கொள்வதற்குரிய ஆலோசனை, வழிகாட்டல் போன்றவற்றை ஆராயும் ஒன்றுகூடலும் செயலமர்வும் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுத்தீன் தலைமையில் 2025.02.27 ம் திகதி வியாழக்கிழமை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யு.எல். அப்துல் மஜீட் பிரதம அதியாக கலந்து பல்கலைக்கழகம் வெளி சமூகத்துக்கு ஆற்றவேண்டிய பல சேவைகள் மற்றும் பொறுப்புகள் பற்றியும் விரிவாக சிறப்புரையாற்றினார்.
மேலும் சிரேஸ்ட உதவி நூலகர்களான எம்.சி.எம். அஸ்வா், கலாநிதி எம்.எம். மஸ்ரூபா, ஏ.எம். நஹ்பீஸ், எஸ்.எல்.எம். சஜீர் மற்றும் நெட்வேர்க் மெனேஜர் எம்.ஜே.எம். சாஜித், நூலக தகவல் உத்தியோகத்தர் யூ.எல். எம். பௌஸ் ஆகியோர்களினால் KOHA தரவுத்தளத்தினை பற்றி விரிவாக விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
No comments