Vettri

Breaking News

பெருந்தோட்ட மக்களுக்கான சுகாதாரம், கல்வி உள்ளிட்ட வசதிகள் தொடர்பில் விசேட அவதானம் - நளிந்த ஜயதிஸ்ஸ!




பெருந்தோட்ட மக்களுக்கான சுகாதாரம், கல்வி உள்ளிட்ட வசதிகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலை ஏலத்தில் உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறுகின்ற பெருந்தோட்ட நிறுவனங்கள் மறுபுறம் அதிக விலைக்குத் தேயிலையை ஏற்றுமதி செய்வதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவெனவும் ஊடகவியலாளர் ஒருவர் குறித்த ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேயிலை சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குக் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதேபோன்று தேயிலை தொழிற்துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து தொடர்ச்சியாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலேயே பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் ஜனாதிபதி கருத்துரைத்துள்ளார்.

அதற்கு அப்பால் செல்ல வேண்டுமாயின் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

எனவே, கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன் பெருந்தோட்ட அமைச்சர், நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதேபோன்று வேதனம் மாத்திரமின்றி பெருந்தோட்ட நிறுவனங்களின் வசமுள்ள சுகாதார நிலையங்கள், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைகள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது
இதன்படி, பல அமைச்சுகள் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி வெவ்வேறு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

No comments