Vettri

Breaking News

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஒன்பது பேர் களத்தில்!




 நூருல் ஹுதா உமர்


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பணியாற்றிய  பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் முதலாவது மூன்றாண்டு பதவிக்காலம் கடந்த 2024.08.08 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் புதிய உபவேந்தர் ஒருவர் நியமிக்கப்படாது பதில் உபவேந்தராக கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போதைய புதிய ஆட்சியின் கீழ் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின்  சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த பெப்ரவரி 06 ஆம் திகதி விடுத்திருந்தார். அதற்கமைய மார்ச் 06 ஆம் திகதி, 3.00 மணி வரை ஒன்பது பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதன் அடிப்படையில், கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எம்.ஐ.எஸ். சபீனா, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக், பேராசிரியர் ஏ.ஜௌபர்  மற்றும் கலாநிதி யூ.எல். செயினுடீன் உள்ளிட்ட ஒன்பது பேர் விண்ணப்பித்துள்ளனர்.

புதிய உபவேந்தர், பல்கலைக்கழக பேரவையின் விசேட ஒன்றுகூடல் ஒன்றின் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கூறப்பட்டுள்ளதன்  அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, பெற்ற அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்வர். குறித்த மூவரில் ஒருவரை ஜனாதிபதி உபவேந்தராக நியமிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments