சாய்ந்தமருது பிரதேசத்தில் நோன்பு கஞ்சி, உணவுப் பண்டங்கள் என்பனவற்றின் சுகாதார நிலைமைகளை பேணுவது தொடர்பான கலந்துரையாடல்!!!
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேசத்தில் எதிர்வரும் ரமழான் காலத்தில் விசேடமாக உற்பத்தி செய்யப்படும் நோன்புக்கஞ்சி , உணவுப் பண்டங்கள் என்பனவற்றின் சுகாதார நிலைமைகளை பேணுவது தொடர்பான கலந்துரையாடல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன் அவர்களின் தலைமையில் இன்று (01) நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியும், சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவருமான டாக்டர் சனூஸ் காரியப்பர், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ஏ.எல்.எம்.சலீம் (சர்க்கி), சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட உணவு கையாளும் நிறுவன தலைவர்களும் பங்கு கொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் ரமழான் காலத்தில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்கள், கஞ்சி விநியோகம் போன்ற விடயங்களில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைக்கு அமைவாக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் அறிவுரை வழங்கப்பட்டது.
அதன்படி பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்தல், பிளாஸ்டிக் வாளிகளில் கஞ்சி வழங்குவதை முற்றாக நிறுத்துதல், தனிநபர் சுகாதாரம் பேணி கெப்,ஏப்ரன் அணிதல், கஞ்சி தயாரிக்குமிடங்களை சுத்தமாக பேணுதல், சுத்தமான உணவுப்பொருட்களைக் கொண்டு ஆரோக்கியமான நபர்கள் மூலம் கஞ்சி தயாரித்தல், உணவைக் கையாள்பவர்களுக்கான மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளல், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மூலமாக கஞ்சி விநியோகத்தை பரிசீலனை செய்தல், சிற்றுண்டி உணவகங்கள் கண்ணாடிப் பெட்டியில் உணவை காட்சிப்படுத்தல், சிற்றுண்டி தயாரிப்பை செய்பவர்கள் மருத்துவ சான்றிதழ் பெறல், கையுறை, தொப்பி போன்றவை கட்டாயமாக அணிதல், வாடிக்கையாளர் உணவை தெரிவதை தடுத்தல், ரமழான் காலத்தில் மட்டும் சிற்றுண்டி தயாரித்து விற்பனை செய்பவர்கள் தங்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
No comments