முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்த அதிஷ்டம்!
( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் வலயக் கல்விப் பிரதேசத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அதிஷ்டம் அடித்துள்ளது.
திருக்கோவிலைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவருமான பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் இந்த அதிர்ஷ்டத்தை வழங்கியுள்ளார்.
திருக்கோவில் பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தமது கொடுப்பனவுக்கு மேலதிகமாக மாதாந்தம் 3000 ரூபாவை வழங்கி வைக்கும் வேலைத்திட்டம் நேற்று (28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பிரதம அதிதியாக பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் கலந்து சிறப்பித்தார்.
திருக்கோவில் வலய முன்பள்ளி பாடசாலைகள் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. விவேகானந்தராஜா உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இது பாலர் ஆசிரியர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஆறு மாத தொடர்ச்சியான நிதி உதவித் திட்டமாகும். சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுந்தரலிங்கம் சசிகுமார் வழங்கி வருகிறார்.
No comments