Vettri

Breaking News

அரச அதிபரின் உத்தரவையடுத்து திருக்கோவிலில் இல்மனைற் அகழும் பணி தற்காலிக இடைநிறுத்தம்! தேர்தல் முடிந்த பின்னர் இறுதி முடிவு!?




(வி.ரி. சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தின் கரையோர திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இன்மனைற் அகழ்வதற்கு எடுத்த முயற்சிகள் 
பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரமவின் உத்தரவையடுத்து இல்மனைற் அகழும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரமவின் உத்தரவு அறிவித்தலை திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் களத்திற்குச் சென்று உரிய அதிகாரிகளிடம் காட்டியதையடுத்து அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனும் சமூகமளித்திருந்தார்.

தாண்டியடி பகுதியில் புவிச்சரிதவியல் அதிகாரி மற்றும் தன்சிலா கம்பனியின் உத்தியோகத்தர் ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச செயலாளர் மற்றும் பொதுமக்கள் கலந்துரையாடினர்.

இறுதியில்,  தற்போது இவ் அகழும் பணியை அரச அதிபரின் உத்தரவையடுத்து தற்காலிகமாக நிறுத்துவது என்றும்,  உள்ளூராட்சி தேர்தல் முடிந்த பிறகு பிரதேச செயலகத்தில் இரு சாராரும் சமூகமளிக்கும் பொதுக் கூட்டத்தில் இப் பணியை தொடர்ந்து மேற்கொள்வதா? முற்றாக இடைநிறுத்துவதா? என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று முடிவு எட்டப்பட்டது.

அதனையடுத்து இரு சாராரும் கலைந்து சென்றனர்.

இருந்தும் குறித்த இயந்திரம் அகற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். இல்லாவிட்டால் அலுவலகம் முன்னால் சத்தியாக்கிரகம் இருப்போம் என்றனர்.

அதேவேளை, இல்மனைற் அகழ்வுக்கு பொறுப்பான தம்சிலா எக்ஸ்போர்ட் கம்பனி நிருவாகிகளும் ஊழியர்களும் தமது அலுவலகம் அமைந்துள்ள சங்குமண்கிராமம் உமிரி  எனும் கிராமத்தில் குறித்த இல்மனைற் அகழும் இயந்திரத்தை நிறுத்தி வைத்துள்ளது.

அதனால் நேற்று (15) இரவு விடிய விடிய இளைஞர் குழாத்தினர் அலுவலகத்திற்கு கூடாரம் அடித்து தங்கியிருந்தனர்.

அவர்கள் கூறுகையில்..
மக்கள் விரும்பாத முயற்சியை நீங்கள் தொடர்ந்து செய்கிறீர்கள் .நாங்கள் அதாவது பொதுமக்கள் இதனை  முற்றாக எதிர்த்து வந்திருக்கின்றோம். எனவே இந்த நிலையில் இப்பொழுது தேர்தல் காலம் .எனவே இப்படியான வேலை இன முரண்பாடுகளை தோற்றுவிக்கலாம். எனவே இம் முயற்சியை கைவிடுங்கள் .இதனை நிறுத்தி விட்டு நீங்கள் பாதுகாப்பாக வெளியேறுங்கள்  என்றனர்.

அங்கு நின்ற சமூக ஆர்வலர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்...
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு எமது பிரதேசத்திற்கு அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுவந்து எமக்குத்தெரியாமல் இல்மனைற் அகழ்வுப்பணிக்கான ஆரம்பவேலையை மேற்கொள்ளத்தலைப்பட்டனர்.

அப்போது பொது மக்கள் கிளர்ந்தெழுந்து எதிர்ப்புத்தெரிவித்தனர். அதுமட்டுமல்ல மணிக்கூட்டுக்கோபுரத்திலிருந்து பாரிய எதிர்ப்பு மழைக்கு மத்தியில் ஊர்வலத்தை நடாத்தி பிரதேசசெயலரிடம் மகஜரும் கையளித்தோம். அத்துடன் அத்திட்டம் கைவிடப்பட்டது.

திருக்கோவில் பிராந்தியத்தில்  இன்மனைற் அகழ்வதற்கு மக்கள் எதிர்ப்புத்தெரிவிக்கின்றனர்.திருக்கோவில் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைக்கு ஏகப்பட்ட முறைப்பாடுகள் எதிர்ப்புத்தெரிவித்து கிடைக்க பெற்றுள்ளது.
பிரதேச சபையில் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் எமக்குத்தெரியாமல் மக்களுக்கு அறிவிக்காமல்  இங்கு இன்று மீண்டும் மீண்டும் வந்து  செய்கின்ற வேலைக்கு நாம் பூரண எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.

எந்தக்காரணம்கொண்டும் திருக்கோவில் பிரதேசகனியவளத்தை சூறையாட அனுமதிக்கமாட்டோம் என்றும் கூறினார்.

அதனிடையே அங்கு வந்த பொதுமக்கள் சிங்களத்திலும் தமிழிலும் மாறிமாறி உரக்கக்குரல்கொடுத்தனர். அவர்கள் கூறியதாவது:

எமது கடலோரவளங்களை இழக்க நாம் தயாரில்லை.இல்மனைற் அகழ்ந்தால்  எமது நிலத்தடிநீர் உவர்நீராகும்.இங்குள்ள தென்னைமரங்கள் தொடக்கம் சகல பயிர்பச்சைகளும் கருகும். புல்மோட்டை நல்ல உதாரணம். மற்றது கடலரிப்பு நடக்கும். ஏற்கனவே ஒலுவில் துறைமுகம் கட்டியதனால் இப்பிராந்தியம் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. எமது திருக்கோவில் முருகனாலயமும் பாதிக்கப்பட்டது. எனவே இன்னமும் நாம் பாதிக்கப்பட விரும்பவில்லை. இங்கு இல்மனைற் அகழவேண்டாம். அதைமீறிச்செய்யமுற்பட்டால் நாம் தீக்குளிப்போம் என உரக்ககத்தினர்.


இவ் இல்மனைற் அகழும் திட்டத்தின்கீழ் அம்பாறை கரையோரத்தில் 46 கி.மீற்றர் தூரம்  ஒலுவில் தொடக்கம் உமிரி வரை இன்மனைற் அகழப்படவுள்ளது. அதன்முதற்கட்டமாக உமிரியில் 0.6 கி.மீற்றர் தூரம் அகழ்வதற்கான களவிஜயம் மூன்று நான்கு வருடங்களாக இடம்பெற்று வந்தது தெரிந்ததே.

தற்போது அரச நிருவாகத்தின் கீழுள்ள கோரைக்குறுப் தென்னந் தோட்டப் பகுதியில் இதனை ஆரம்பிக்க முயற்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments