தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ, சட்ட மற்றும் சுற்றுலா பீடங்களை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்- எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை.!
(எஸ். சினீஸ் கான்)
நாட்டில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பல தசாப்தங்களாக இருந்துவரும் பாடத்திட்டங்களே தற்போதும் இருந்து வருகின்றன. அதனால் நவீன உலகத்துக்கு ஏற்றவகையில் எமது பாடத்திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
எமது நாட்டில் பாடசாலைகளில் இருந்து வரும் கல்வி திட்டம் முதல் பல்கலைக்கழகங்களில் இருந்துவரும் கல்வித்திட்டம் வரை பல தசாப்தங்களுக்கு முன்பிருந்த கல்வித்திட்டங்களே இருந்து வருகின்றன.
இவை மாற்றப்பட வேண்டும். எமது அண்மித்த நாடான இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் நவீன துறைகளுக்கேற்ற வகையில் அந்த நாடுகளின் பல்கலைக்கழங்களின் கல்வித்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன.
அதனால் எமது பல்கலைக்கழங்களில் பயின்று பட்டம் பெற்று வெளியேறுகின்ற மாணவர்கள் வெளிநாடுகளில் சர்வதேச ரீதியில் தொழில் வாய்ப்புக்களை பெற முடியுமான கல்வித்திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அஷ்ரப் பல கனவுகளுடனே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தார். தற்போது அதில் பல தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.
குறிப்பாக அந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் 2,3 அரச மருத்துவமனைகள் இருக்கின்றன.
அந்த வைத்தியசாலைகளை அடிப்படையாகக்கொண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்.
அதேபோன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்டகாலமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதனால் இந்த இரண்டு பீடங்களையும் அங்கு ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா கைத்தொழில் முன்னேறி வருகிறது. பொதுத்துவில் அருகம்பை, பாசிக்குடா, நிலாவெளி என அபிவிருத்தியடைந்து வருகின்றன.
ஆனால் அந்த துறைக்கு தேவையான ஆனணியை பெற்றுக்கொடுக்க முடியாமல் இருக்கிறது. அதனால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுற்றுலா கல்வி பீடம் ஒன்றை ஏற்படுத்தி அதிகமான மாணவர்களை அந்த துறையில் பயிற்றுவிக்க முடியும். அதற்கான முயற்சிகளை அமைச்சர் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பொத்துவிலல் இயங்கிவரும் வலயக்கல்வி காரியாலயம் தற்காலிகமாகவே நீண்டகாலமாக இயங்கி வருகிறது. மூன்று இனங்களுக்குமாக அமைக்கப்பட்ட கல்வி வலயமாகும்.
நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் அதன் கீழ் இயங்குகின்றன. ஆனால் இன்றும் அந்த வலயக்கல்வி, மத்திய அரசாங்கத்தினால் அனுமதிக்கப்படாமல் இருக்கிறது.
No comments