Home
/
இலங்கை செய்திகள்
/
உலக செய்திகள்
/
பிரதான செய்திகள்
/
தமிழ் இலக்கியத்தில் பெண்கள் போற்றப்பட்டனரா? இன்று சர்வதேச மகளிர் தினம்(06.03.2025).
தமிழ் இலக்கியத்தில் பெண்கள் போற்றப்பட்டனரா? இன்று சர்வதேச மகளிர் தினம்(06.03.2025).
உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் இந்த மகளிர் தினம். "
அனைத்து பெண்கள் பெண் பிள்ளைகளுக்காக உரிமை சமத்துவம் வலுப்படுத்தல்" என்கின்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது.
தமிழ் இலக்கியத்தில் பெண்கள் போற்றப்பட்டனரா? தாழ்த்தப்பட்டனரா? என்பதை இவ்வருட மகளிர் தினத்தில் ஆராய்வோம்.
தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது கண்கூடு.
அதேவேளை வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவதை பொதுவாக காணலாம்.
உலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்கு கீழே வைத்திருந்த காலகட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ்ச் சமூகம். இது வெள்ளிடைமலை.
ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதனை சொன்னது வடமொழி இலக்கியங்கள்.
ஆனால் அவன் ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால், அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு என்பதை போதிப்பது தமிழ் இலக்கியங்கள்.
சங்ககாலத்திலேயே, 47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான். உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் இருந்தார்கள் என்பது வரலாறு.
தேவபாஷை என்று கூறிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது.
ஏன்? சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது. ஆனால் கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரைப் பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது.
ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம் என்றால் மிகையாகாது.
தமிழ், தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால் தான். பெண்கள் உலகத்தின் ஆணிவேர்கள். அவர்களைக் கொண்டாடுவோம்..
தமிழ் இலக்கியத்தில் பெண்கள்!
இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்கப் பணிக்கிறான். தீயில் இறங்கி தான் பத்தினி என்பதை நிரூபிக்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங்காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.
அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள்....
இது ராமாயணம்.
ஓர் அழகிய இளம் மங்கை. அவளுக்கு முதிர்ந்த கணவன். மனமுவந்து வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள். ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள். தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
இது நளாயினி கதை...
இது அனைத்தும் வடமொழி இலக்கியங்கள் ஆகும்.
மாறாக தமிழ் மொழி இலக்கியங்கள் என்ன கூறின என்பது பற்றி பார்ப்போம்.
தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டான் பாண்டிய மன்னன். தன் கோபத்தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள் கண்ணகி, தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், மதுரையை ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், 'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று.
இது சிலப்பதிகாரம்...
அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான். அவள் வலக்கையில் வாங்கி இடக்கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை, ஆபாச படமெடுத்து மிரட்டவில்லை. அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான்.
இது மணிமேகலை.
அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அவளும் விபரமறியாது கூடவே செல்கிறாள். மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது,
'இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்' என்று.
யோசிக்கிறாள். இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், "நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்? நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை. ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள்.. உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு" என்று சொல்கிறாள். "அட அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா" என்று கணவனும் சொல்ல, சுற்றுகிறாள். முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள்.
இது குண்டலகேசி.
இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்.
எனவே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து போற்றியது தமிழ் இலக்கியமே எனலாம்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
தமிழ் இலக்கியத்தில் பெண்கள் போற்றப்பட்டனரா? இன்று சர்வதேச மகளிர் தினம்(06.03.2025).
Reviewed by Thashaananth
on
3/06/2025 11:07:00 AM
Rating: 5

No comments