Vettri

Breaking News

நாளை செட்டிபாளையம் சிவனாலய மகா கும்பாபிஷேகம்!




 மட்டக்களப்பு செட்டிபாளையம்  சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் 05 ஆம் தேதி புதன்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகியது.


எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் 7 ஆம் 8 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நாளை 09 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் முன்னிலையில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.ஜனார்த்தனன் சர்மா தலைமையில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று 20 ஆம் தேதி 1008 சங்காபிஷேகத்துடன் நிறைவடையும் என ஆலய பரிபாலன சபையின் செயலாளர் ம.புவிதரன் தெரிவித்தார்.

வரலாறு.

இலங்கைத்திருநாடு
திருமூலரால் சிவ பூமி என அழைக்கப்படுகிறது.
 இத்திரு நாட்டில்   மட்டக்களப்பு மாவட்டத்தின் செட்டிபாளையம் புண்ணிய பதியில் சிவன் ஆலயம் அமைந்துள்ளது . இத்திருத்தலத்தில்   தென் திசை நோக்கி  கருவறையில் தட்சணாமூர்த்தியாக சிவலிங்க வடிவில் சிவபெருமான்  எழுந்தருளியுள்ளார்.  

வேண்டுவோர் வேண்டியபடி அருள்பாலிக்கும் அருளாட்சி நிறைந்த ஆலயமாக செட்டிபாளையம் சிவன் ஆலயம் பிரசித்திபெறுகிறது. 

இவ்வாலய கருவறையில் அமைந்துள்ள மூலமூர்த்தி சோமகலா நாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வர் என அழைக்கப்படுகின்றார்.

ஆன்மீகத்துறவி  ஸ்ரீலஸ்ரீ  சோமேஸ்வரானந்த கிரி  சுவாமி அவர்கள் இந்திய காஸ்மீர் தேசத்தில்  இருந்து 1939 களில்  இலங்கை வந்து மட்டக்களப்பு செட்டிபாளையம் கிராமத்தில் சிவன் ஆலயத்தினை  நிறுவி மக்களை ஆன்மீக வழியில் செப்பனிட்டு சமுகத்தை நேசிக்கும் நல்லதொரு பரம்பரையினரை உருவாக்கினார்.

இவ் ஆலயம் இலங்கையில் தென்திசை நோக்கிய சிவன் ஆலயமாகும். மற்றும் மட்டக்களப்பில் எழுவான் கரையில் அமைந்துள்ள தட்சணாமூர்த்தி வடிவில் மூலவராக சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் புகழ்பெற்ற சிவதலமாகும்.
  
இந்தியாவின் காஷ்மீர் தேசத்தில் அவதரித்த ஆன்மீக துறவி ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமி அவர்கள் பத்திரிகேதாரம், 
விசாகபட்டினம்,  கல்கத்தா, காசி, அயோத்தி, மணிப்பூர்,  திருவண்ணாமலை, திருச்சி மற்றும்  ஸ்ரீரங்கம் முதலான புண்ணிய தலங்களுக்குச் சென்று இறை அருளாசி பெற்று பாண்டுவா என்ற இடத்தில் மகரிஷி ஒருவருடன் இருந்தபோது சுவாமிஜி அவர்களுக்கு சிவபெருமான் ஒரு வேடுவன் உருவத்தில் தோன்றி தாயத்தும் மணியும் அளித்தார் என கலியுக மாயப்பெண் என்னும் இந்தியாவில் வெளியிடப்பட்ட நூலின் மூலமாக அறியமுடிகிறது.

ஈழத்திருநாட்டிற்கு 1939 ஆண்டு  தலைமன்னார் ஊடாக கால்பதித்த சுவாமிஜி அவர்கள் குறிப்பாக கிழக்கு மாகாணம் பூராகவும் கிராமம் கிராமமாக சென்று  தனது ஆன்மிக பணியை ஆற்றி வந்தார். இந்துமத தத்துவ கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பினார்,  சமய சொற்பொழிவுகள், கூட்டு வழிபாடு, கூட்டுப் பிரார்த்தனை, பண்ணிசை பாடுதல் முதலான இறை வழிபாடுகளை ஊக்கப்படுத்தினார். சிவ சின்னங்களை தரிக்க செய்தார்.சிவபுராணங்களை நிதமும் ஓதுவதற்கு வழி காட்டினார். இவரது போதனைகளுக்கு பெருவாரியான மக்கள் வெள்ளம் அணி திரண்டது. இவரின் மேல் தீராத பக்தி கொண்ட மக்கள் இவரை தங்கள் வாழ்வின் ஆன்மீக குருவாக வழிபட தொடங்கினர்.

இதன் ஈறாக திருகோணமலை குச்சவெளியில் செம்பீஸ்வரர் ஆலயத்தை தளமாக கொண்டு மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் கிருஷ்ணன் கோவில் மற்றும் செட்டிபாளையத்தில் சிவன் ஆலயத்தையும் மக்கள் பங்களிப்புடன் நிறுவினார்.
 
குறிப்பாக இவர் செட்டிபாளையத்தில் பல ஆண்டுகாலம் தங்கியிருந்து மக்கள் மத்தியில் புரையோடிப் போயிருந்த சிந்தனையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை ஆன்மீக வழியில் செப்பனிட்டதோடு சமூகத்தின் மீது அக்கறை கொண்டு பணிகளை ஆற்றக்கூடிய வல்லமையினையும் மக்களுக்கு விதைத்தார். 

ஆலயத்தையும் சமூகத்தையும் ஒருங்கே நேசிப்பதற்காக ஆலயம் ஆரம்பித்த காலத்திலேயே திருவருள் சங்கத்தை  ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக நிறுவி ஆளுமை மிக்க  நல்பக்தர் குழாத்தினை உருவாக்கினார். இதற்காக புராண இதிகாசத்தில் கூறப்பட்ட கருத்துக்களை கையாண்டார்.  

 செட்டிபாளையத்தில்  1940ஆம்ஆண்டு சுவாமி அவர்களின் அருள் ஆசியினால்  மக்களின் அயராத பங்களிப்பினாலும் சிவன் ஆலயத்தை நிறுவினார். மக்கள் சிவனை குடிசையில் வைத்து  வழிபட்டு வந்தனர். அக்காலங்களில் கூட்டு பிரார்த்தனை வழிபாடு, சமய போதனைகள் சுவாமி அவர்களால் நிகழ்த்தப்பட்டு வந்தது. மக்கள் மத்தியில் புத்தொழி தோன்றியது சுவாமிஜி அவர்கள் இந்தியா சென்ற  போதிலும் அங்கிருந்து கடிதப் பரிமாற்றங்கள் ஊடாக மக்களது ஆன்மிக நாட்டத்தை இடையறாது கட்டிக் காத்து வந்தார்.

இதன் பிற்பட்ட காலங்களில் குறிப்பாக 1952 களில்ஆலயத்தினை கல்லினால் அமைக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு  திருவருள் பெண்கள் சங்கத்தின் பிடியரிசி சேகரிப்பும், திருவருள் ஆண்கள் சங்கத்தின் சந்தா பண அறவீடு மற்றும் கிராம மக்களின் நிதி பங்களிப்பும் ஆலய கட்டுமானத்திற்கு கை கொடுத்தது.  

எனினும் 1978ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியினால் ஆலய கட்டுமானம் பாதிக்கப்பட்டது. இருந்த போதிலும் ஆலய நிருவாகத்தினரின்  அயராத முயற்சியின் காரணமாக சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ஆலயத்தினை அதே இடத்தில் 1981ஆம் ஆண்டு தென் திசை நோக்கி அமர்ந்த மூலவரை பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேகத்தை மக்கள் நிறைவு செய்திருந்தனர். 

மூல மூர்த்தியானது இவ்வாலயத்திற்கு கிடைத்த வரலாறு இன்று வரை அதிசயமாகவே பார்க்கப்படுகின்றது. ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமி அவர்கள்   மக்களிடம் தாங்கள் வழிபடுவதற்கு ஒரு மூலமூர்த்தி உங்கள் ஆலயம் விரைவில் வந்து சேரும் என்று குறிப்பிட்ட போதிலும் யாரும் எதிர்பாராத வேளை ஒருநாள் வம்மிமர நிழலில்  சிவலிங்கம் இருப்பதனை கண்ணுற்ற மக்கள்  ஆச்சரியமடைந்தனர். இறைவனின் திருவிளையாடல் என 
நினைந்து அச் சிவலிங்கத்தையே மூல மூர்த்தியாக பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

அத்தோடு இவ் ஆலய கட்டுமானத்திற்காக  வங்கக் கடலோரம் ஆலயத்திற்கு சரிநேராக கரையொதுங்கிய பெரிய தொரு   மரத்தினை மக்கள் கண்டெடுத்து இதையொரு இறையருளாக நினைந்து ஆலயத்திற்கு வழங்கியதாகவும் அந்த மரத்தின் மூலமே ஆலயம் முழுவதற்குமான கூரை அமைக்கப்பட்டதாகவும்  பண்டிதர் வீ. சி. கந்தையா தனது ஈழத்து ஆலயங்கள் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவை இரண்டும் பேரதிசயமாக இன்று வரை மக்களால் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வளர்ச்சி மிக்க பின்புல சூழலில் 1990ஆம் ஆண்டுகளில் செட்டிபாளையத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. இவ் இராணுவ முகாம் எல்லைக்குள் இவ்வாலயமும் உள்வாங்கப்பட்டது. இதன் காரணமாக ஆலயம் பல்வேறு விதமான பாதிப்புகளை எதிர்கொண்டது. அக்காலத்தில் மக்கள் வழிபட முடியாத சூழ்நிலை காணப்பட்டது. எம்பெருமானின் பூஜை வழிபாடுகளுக்கு மட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டது. ஆலய கட்டுமானம் பாதிப்புகளை எதிர்கொண்டது.
2011ஆம் ஆண்டு இராணுவ முகாம் அகற்றப்படும் வரை இவ்வாலயத்தின் பகுதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் சேதமாக்கப்பட்டது.

இவ்வேளை 2013ல்  புதிய நிருவாக சபை பொறுப்பெடுத்தது. இதுவரை காலம் யுத்த வடுக்களை சுமந்திருந்த கிராம மக்களுக்கு சுவாமிஜியின் போதனைகளுக்கு இணங்க பொறுப்பெடுத்த நிருவாகம் சமூக மற்றும் கல்விப் பணிகளை உத்வேகத்துடன் முன்னெடுத்தது. இருந்த போதிலும்  

பாதிக்கப்பட்ட ஆலயத்தை தொடர்ந்து வழிபட முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் 2016ஆம் ஆண்டு புதிய நிருவாக சபை தோற்றுவிக்கப்பட்டது. மக்கள் வழிபடுவதற்ககு ஆலயத்தை புனரமைக்குமாறு கோரிக்கை விடுத்தனர் நிருவாக சபையின் தலைமைத்துவத்தை மூனா.பாலகிருஷ்ணன் அவர்கள் பொறுப்பெடுத்தார். இவரது தலைமைத்துவத்தில் புதிய சிந்தனைகள் உள்வாங்கப்பட்டது.
புதிய ஆலய கட்டுமானத்திற்கான எண்ணகருவினை அவர் விதைத்தார்.
இந்தப் பின்னணியில் திருவருள் சங்கத்தின் நிருவாகமும் கிராம மக்களும் புதிய ஆலயம் ஒன்றை கவின் கலை நுட்பத்துடன் அமைப்பதற்கு தீர்மானித்தனர்.

2016.11.05ஆம் திகதி புதிய ஆலயத்திற்கான அடிக்கல் 
சிவ ஸ்ரீ சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் ஐயா அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வினை ஆலய தலைவர் மூனா பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்.  கிராம மக்களும், மட்டக்களப்பு  மாவட்டத்தைச் சேர்ந்த சிவபக்தர்களும், இலங்கை தேசம் மற்றும் புலம்பெயர் தேசத்தில் வாழும் மக்களதும் நிதிப் பங்களிப்போடு  புதிய ஆலயம் அமைக்கப்பட்டு எதிர்வரும்  பெப்ரவரி மாதம்  2025ஆம் ஆண்டு ஒன்பதாம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவாதிரை நட்சத்திர சுபமுகூர்த்த வேளையில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு இறைஅருட்கடாட்சம் கிடைத்துள்ளது. 

இந்த புதிய ஆலய கட்டுமானத்தில் நிருவாக சபையினதும் ஏனைய தொண்டர்களினதும் கிராமப் பொதுமக்களினதும் அயராத பங்களிப்பு காத்திரமானது. 

இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு... உலகாளும் எழில் வடிவோன் ஈசன் அருள் வடிவாக எழுந்தருள தோள் கொடுப்போம் வாரீர் என் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் ம.புவிதரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர் 

No comments