Vettri

Breaking News

அர்ச்சுனா ராமநாதனின் இனவாத கருத்துக்கள் பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்!!!




 நூருல் ஹுதா உமர்


முஸ்லிம்கள் ஓர் இனம் இல்லை, அவர்களும் தமிழர்கள் தான் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் இன்று (24) பாராளுமன்றத்தில் பேசிய இனவாதப் பேச்சை வன்மையாக  கண்டிக்கிறோம். சிங்களவர், தமிழர் எனும் இரண்டு இனங்களே இலங்கையில் உள்ளன. முஸ்லிம்கள் தமிழர்களுக்கு தான் உள்ளனர் என்று நாடாளுமன்றில் அவர் இனவாதம் பேசினார். அர்ச்சுனா ராமநாதன் எம்.பியின் இந்த கருத்து தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் எம்.பியும் கண்டனம் வெளியிடவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கண்டனம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், விடுதலை புலிகள் ஆயுதமுனையில் கடந்த காலங்களில் செய்தவற்றை பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு செய்யலாம் என விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் முனைவது பல்லினம் வாழும் சோஷலிச ஜனநாயக குடியரசு நாடான இலங்கையில் எப்போதும் நடக்காது என்பதை அவர் உணர்ந்து கொள்ளவேண்டும்.

தான் பாராளுமன்றம் சென்ற முதல் நாளிலிருந்து முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர அர்ச்சுனா ராமநாதன் பற்றி கூறியதை மெய்ப்பிக்கும் விதமாக நடந்து வருவதை நாட்டுமக்கள் அறியாமலில்லை. தனக்கு வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்வதாக கூறிக்கொண்டு நாட்டின் இறையாண்மையையும், அரசியலமைப்பையும் மீறும் விதமாக நடப்பது அர்ச்சுனா ராமநாதன் போன்றவர்களுக்கு பொருத்தமில்லை. இந்த உரைக்காக அவர் இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரி இந்த கருத்தை வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் தலைவர்களும், எம்.பிக்களும் மௌனத்தை கலைத்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் இன்று (24) பாராளுமன்றத்தில் பேசிய இனவாதப் பேச்சை கண்டிக்க வேண்டும் என்பதுடன் அவரது உரையின் இனவாத கருத்தை பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தப்பட்டுள்ளது.


No comments