நீதிமன்றத்திற்குள் பிரவேசிக்கும் சட்டத்தரணிகளையும் சோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!!
நீதிமன்றத்திற்குள் பிரவேசிக்கும் சட்டத்தரணிகளையும் சோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேவேளை நீதிமன்றத்திற்குள் ஆயுதம் தரித்த படையினரை பாதுகாப்புக்கு அமர்த்துவது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்காக விசேட குழு ஒன்றும் நியமிக்கப்படும் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (20) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
“கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ள துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது. தற்போதைய நடைமுறை செயற்பாடுகளுக்கு அமைய நீதிமன்றத்திற்குள் பாதுகாப்புத் தரப்பினர் ஆயுதம் தரித்து பிரவேசிக்க அனுமதி கிடையாது. இவ்வாறான நிலையில் தான் நீதிமன்றத்திற்குள் துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றது.
மேற்படி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ள நபர் சட்டத்தரணியைப் போன்று வேடமிட்டு நீதிமன்றத்துக்குள் பிரவேசித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் நீதிமன்றத்துக்குள் ஆயுதம் தரித்த படையினரை அனுமதிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஒன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்குள் பிரவேசிக்கும்.சட்டத்தரணிகளை சோதனை செய்வதற்கும் சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளோம்.
கனேமுல்ல சஞ்சீவ என்ற நபரை பாதுகாப்பு தரப்பினர் காலி பூசா சிறைச்சாலையில் இருந்து பாதுகாப்பாகவே நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துள்ளார்கள். வீதியில் இடை நடுவில் எதுவும் நடக்கவில்லை. பாதாள குழுக்களின் செயற்பாடுகளினால் பாதுகாப்பு தரப்பினரது பாதுகாப்பும் எச்சரிக்கை மிகுந்ததாக மாறியுள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.
பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முப்படையினர் மற்றும் பொலிஸ் தரப்பினரினதும் சம்பளம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து வராமல் சிறைச்சாலையில் இருந்தவாறு சாட்சியம் பெற்றுக்கொள்வதற்கு குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையை திருத்தம் செய்யும் வகையில் அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதத்தில் அச்சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments