எம்.பிக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் தீர்மானம் இல்லை; தேவையேற்படின் ஆராயப்படும்!!
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்கும் எத்தகைய தீர்மானமும் எடுக்கப்படவில்லை என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்த அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் ஒரே நிலைப்பாட்டையே பின்பற்றுகிறது.
இதில், எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.
எம்.பி.க்களின் பாதுகாப்புக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இது தொடர்பில் ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தார்.
இந்தப் பின்னணியிலேயே, சில ஊடகங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தமக்கு பாதுகாப்பு வேண்டுமெனக் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
எனினும்,இது பற்றி எந்த முடிவுக்கும் அரசாங்கம் வரவில்லை.இவர்களின் வேண்டுகோள்களைப் பரிசீலனை செய்து தேவைப்பட்டால் மாத்திரம் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆளும் கட்சியின் எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்புத் தொடர்பில் இதுவரை எத்தகைய வேண்டுகோளையும் விடுக்கவில்லை.
No comments