கிழக்கு மாகாண விவசாயிகள், மீனவர்களின் அபிவிருத்தி தொடர்பில் வரவு செலவுத்திட்டத்தின் பங்களிப்பு என்ன? ; கேள்வியெழுப்பினார் அஷ்ரப் தாஹிர்!!
கிழக்கு மாகாணமானது கடல் தொழில் மற்றும் நெல் உற்பத்திகளை பிரதானமானதாக கொண்டமைந்து காணப்படுகின்றது. இந்த நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் அம்பாறை மாவட்டம் நான்கில் ஒரு பங்கு உற்பத்தியினை தேசிய உற்பத்திக்காக வழங்குகின்ற பிரதேசமாக இருந்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கடந்த (20) அன்று பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
மேலும் உரையாற்றுகையில் குறித்த விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்ற சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்ப்பாசன முறைமையை விஸ்த்தரித்து பொத்துவில் பிரதேசங்களில் உள்ள சிறிய குளங்களை புனர்நிர்மாணம் செய்வதன் மூலம் இரண்டு போக வேளாண்மை செய்கையை நடைமுறைப்படுத்த இந்த வரவு செலவு திட்ட முன்மொழிவில் ஏதாவது முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதா?
கடந்த வருடம் பல தடவைகள் குறித்த நீர்த்தேக்கத்தின் மேலதிக நீர் வெளியேற்றத்தின் காரணமாக விவசாயிகள் பாதிப்படைந்திருக்கிறார்கள். குறிப்பாக பாணமை தொடக்கம் புல்மோட்டை வரையான சுமார் பத்தாயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவை கொண்ட கிழக்கு மாகாணம் தேசிய வருமானத்திற்கு பாரியளவிலான பங்களிப்பினை வழங்க கூடிய பிரதேசமாக மாற்றியமைக்கப்படல் வேண்டும்.
குறிப்பாக மீனவர்களை மையப்படுத்திய திட்டங்களை அறிமுகப்படுத்தி இப்பிரதேசங்களில் காணப்படும் துறைமுகங்களை முறையான பயன்பாட்டிற்கு கொண்டுவருவதுடன் நன்நீர் மீன் வளர்ப்பு திட்டங்களுக்கான ஊக்குவிப்புக்களையும் மேற்கொள்வதற்கான ஒதுக்கீடுகள் இந்த வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதா?
விவசாய பயிர்ச்செய்கை நிலங்கள் வனவிலங்கு,வன இலாகா , தொல்பொருள் மற்றும் பாதுகாப்பு தளங்கள் போன்றவாற்றுக்காக அரசு கையகப்படுத்தியுள்ளமை விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி நிலையை ஏற்படுத்தியுள்ளது. அவற்றை சீர் செய்வதற்கான திட்டங்களை வகுக்குமாறு அரசிடம் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டிருந்தார்.
கடந்தகால ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்ற பொத்துவில் பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினை மற்றும் நீர்ப்பசான பிரச்சினைக்கான தீர்வு திட்டமாக ஹெட ஓயா திட்டம் மக்களுக்கு மிகுந்த பிரயோசனத்தை வழங்ககூடியதாக காணப்படுவதானால் அத்திட்டத்தை இவ்வரசாங்கம் விரைவாக கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் குறித்த வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தின் தேவைகளை நிவர்த்திக்கும் வகையில் அதிக ஒதுக்கீடுகளை செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
No comments