புனித ரமழான் காலத்தில் இறுக்கமாக கண்காணிக்கப்பட போகும் கல்முனை மாநகர உணவகங்கள்!!!
நூருல் ஹுதா உமர்
புனித ரமழான் காலத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட கல்முனை, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் விசேட உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (11) கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி டாக்டர். எஸ்.எப். இசட். சஹாரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பிராந்திய தொழில் சார் நலன் மற்றும் உணவுப் பாதுகாப்பு வைத்திய அதிகாரி டாக்டர். முஹம்மட் பௌசாட், சாய்ந்தமருது மற்றும் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களுடன் கல்முனை தெற்கு, கல்முனை வடக்கு மற்றும் சாய்ந்தமருது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.
இதன் போது நோன்பு காலத்தில் வீதியோரங்களில் விற்பனை செய்யப்படும் உடனடி உணவுகள், கடைகளில் விற்பனை செய்யப்படும் கஞ்சி வகைகள் போன்றவற்றை பரிசோதனை செய்வதுடன் இவ் உணவக உரிமையாளர் களுக்கு வழிகாட்டுதல் நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
விசேடமாக நோன்பு காலங்களில் சிற்றுணவு வகைகளை விற்பனை செய்ய விரும்பும் வியாபாரிகள் தாங்கள் இவ்வாறு விற்பனையில் ஈடுபட இருப்பதாக உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இவ் வழிகாட்டல் வழங்கப்பட்ட பின்னர் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய நிலையில் உணவுகளை சமைத்து விற்பனை செய்யும் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
No comments