பிராந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உணவகங்களின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பான விசேட கூட்டம்!!
நூருல் ஹுதா உமர்கல்முனை பிராந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உணவகங்களின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பான விசேட மீளாய்வு கூட்டம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.
பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த கூட்டம் சனிக்கிழமை (22) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌஸாத், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.லபீர், உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா மற்றும் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது உணவு பாதுகாப்பு மற்றும் உணவகங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் சுகாதார வைத்திய அதிகாரிகளினால் விளக்கக்காட்சிகளுடன் விளக்கவுரைகளும் நிகழ்த்தப்பட்டது.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களை பதிவு செய்கின்ற போது சுகாதார ரீதியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்தும் கல்முனை மாநகர சபை ஆணையாளருடன் கலந்துரையாடுவது என இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடும் விசேட கூட்டம் நாளை (24) பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments