நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ!!
போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவருமான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ நேற்று (19) கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஹல்ஃப்ஸ்டொப் நீதிமன்ற வளாகத்திற்குள்ளிருந்த நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 05 ஆம் எண் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சாட்சிக்கூண்டில் நின்ற வேளையில், இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சட்டத்தரணிகள் வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்தவர், சஞவவைக் கொல்லும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
பூசா சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ, பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
பொலிஸாரின் தகவலுக்கு அமைவாக, சந்தேக நபருக்கு எதிராக மூன்று வழக்குகள் விசாரிக்கப்படவிருந்தன,
சந்தேக நபருக்கு எதிரான மூன்று வழக்குகளில் முதல் வழக்கு விசாரணைக்கு நிறைவடைந்து, இரண்டாவது வழக்கு விசாரணைக்கு வரவிருந்த வேளையில், இச்சூடு நடத்தப்பட்டது. சட்டத்தரணிக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில்
சட்டத்தரணி வேடமணிந்திருந்த ஒருவர்,விசாரணைக் கூண்டில் நின்றிருந்த கணேமுல்ல சஞ்சீவா அருகே சென்று, சட்டைப் பைக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால், சந்தேக நபர் சஞ்சீவாவின் மார்பில் ஐந்து முறை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினார்.இதில்,
கணேமுல்ல சஞ்சீவ, பலத்த காயங்களுடன் கூண்டில் சரிந்து விழுந்தார்.சிறை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உடனடியாக அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டையடுத்து நீதிமன்றத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. தாக்குதலை நடத்திய
சந்தேக நபர்,நீதிமன்றத்தின் பிரதான வாயிலை விட்டு வெளியேறும் காட்சிகள் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்திலிருந்த சகல நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன.பின்னர் பிற்பகலில் தலைமை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகின.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து,பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதியமைச்சர் சுனில் வட்டகல,பதில் பொலிஸ் மா அதிபர், நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் குழு நீதிமன்ற வளாகத்தை ஆய்வு செய்ய வந்திருந்தது.
வழக்கறிஞராக மாறு வேடமிட்ட ஒரு பெண், கொலையாளிக்கு உதவியாக வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்னர், பெண்ணின் கையில் துப்பாக்கி இருந்துள்ளது. இத்துப்பாக்கியை புத்தகத்தில் மறைத்தவாறு சட்டத்தரணிகள் அறையில் வைத்ததாகவும் தெரிய வருகிறது.குறித்த பெண்ணே
துப்பாக்கியை கொலையாளிக்கு வழங்கியுமுள்ளார்.
இவ்விருவரும் கூட்டாக இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
No comments