ரோஹிங்கியா அகதிகள் விடயத்தில் முஸ்லிம் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும்- அல்- மீஸான் பௌண்டஷன் கோரிக்கை !
நூருல் ஹுதா உமர்
இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் மியான்மர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது மனிதாபிமானத்தை விரும்புபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பான நாட்டில் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொள்ளும் நோக்கமாகவே இவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மியன்மாரில் இருந்து நாட்டை வந்தடைந்த அகதிகள் குற்றவாளிகளோ, சந்தேக நபர்களோ அல்ல என்பதால் அவர்களை தடுத்து வைப்பது முற்றிலும் தவறு எனச் சுட்டிக் காட்டி இருக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ, ஐக்கிய நாடுகள் அலுவலக அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரும் மௌனம் காப்பாத்து கவலையளிக்கிறது.
அகதிகள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய அபாயம் உள்ள நாட்டுக்கு அவர்களை வலுகட்டாயமாகத் திருப்பி அனுப்பாதிருத்தல் எனும் சர்வதேச அடிப்படைச் சட்டத்துக்கு முரணான விதத்தில் மியன்மார் அகதிகளை மீண்டும் அந்நாட்டுக்குத் திருப்பியனுப்புவது ஏற்புடையதல்ல என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ரூக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இது விடயத்தில் இலங்கையில் தஞ்சமைடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதியிடம் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அறிகிறோம். அதுபோன்று முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், ஏ.எல்.எம். அதாஉல்லா, ஆசாத் சாலி போன்ற கட்சி தலைவர்களும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மனிதாபிமான விரும்பிகளும், முஸ்லிங்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதனை கவனத்தில் கொண்டு மனிதாபிமானமிக்க அரசாங்கமும், அரசியல்தலைவர்களும் அந்த அகதிகளை மீள மியன்மார் நாட்டுக்கு அனுப்பாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா பகிரங்க வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
No comments