சேனநாயக்கா சமுத்திரம் வான்கதவு திறப்பு ! அம்பாறை மாவட்டத்தில் அடைமழை; வெள்ளம்!!
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் 5 அவசர வான் கதவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கப்பட்டுள்ளது என்று
அம்பாறை நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் அறிவித்தார்.
நேற்றிரவு மற்றும் தற்போது வரை அம்பாறையில் கடும் மழை பெய்து வருவதால் சேனநாயக்க சமுத்திரத்துடன் கூடிய பிரதான நீர்ப்பாசன குளங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெய்த அடை மழையினால் பெரும்பாலான தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் நிரம்பி வருகிறது.
மாவட்டத்தில் விழிப்புணர்வு மற்றும் தயார்நிலைக்காக கீழ்நிலை தாழ்வான பகுதி மக்களுக்கு முன் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள் .
தற்போது பெய்து வரும் மழையால் சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 106.6 அடி ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, இன்று, 19.01.2025ம் திகதி காலை 8.00 மணிக்கு 5 வான் கதவுகளில் இருந்து 6 அங்குல அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபயவிக்ரம தெரிவித்துள்ளார்
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, சுமார் 12 அங்குலம் அல்லது ஒரு அடி திறக்க வேண்டி ஏற்படும் . அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுக்க தயாராக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்
மேலும் இது தொடர்பாக போலீசார் மற்றும் முப்படையினருடன் கலந்து ஆலோசித்து வெள்ளம் சூழக்கூடிய சாலைகளை மூட நடவடிக்கை எடுக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது
மேலும் மழை பொழிகின்ற பட்சத்தில் குளத்தின் வான் கதவுகள் பல அடிதிறக்கப்பட நேரிடலாம் என்று கூறப்படுகிறது .
இதனிடையே தாழ்நிலப் பகுதிகளில் கூடுதலான வெள்ளநீர் பாயந்து வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து மந்தமாக இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக தாழ்நிலப் பகுதிகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
நேற்று இன்று பூராக வானம் இருண்டு மழைபொழிந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டு நாட்கள் இக் காலநிலை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments