கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் - கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை..!!!
(நூருல் ஹுதா உமர்)
நாட்டினுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கும் எங்களால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருக்கிறோம். அதேநேரம் மக்களுடைய பிரச்சினைகளையும், அபிவிருத்தியின் தேவைகளையும் பற்றி இந்த உயர்ந்த சபையில் பேசவேண்டிய தேவை எமக்கிருக்கிறது, அரசாங்கமானது நாட்டினுடைய பொருளாதாரத்தில் மிக முக்கிய வருமானமாக இருக்கின்ற சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு எந்தவொரு பணியையும் இதுவரை முன்னெடுக்கவில்லை என்றும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினை முன்னேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்தார்.
செவ்வாய்க்கிழமை (7) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர் மேலும் உரையாற்றுகையில்,
சுற்றுலாத்துறையின் பிரதான இடமாக கிழக்கு மாகாணம் திகழ்கிறது. குறிப்பாக பொத்துவில் பிரதேசத்திலுள்ள அருகம்பை பிரதேசமானது ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைதரும் இடமாக இருக்கிறது. ஆனால் அது இதுவரையில் சுற்றுலா வலயமாக கெசட் செய்யப்படவில்லை, அங்கிருக்கின்ற கடற்கரையை சுத்தம் செய்வதற்கான இயந்திரத்தை கூட சுற்றுலா அமைச்சு அல்லது சுற்றுலா பணிமனை அங்கிருக்கின்ற உள்ளூராட்ச்சி மன்றத்திற்கு வழங்கவில்லை அது மட்டுமல்லாது சில காரணங்களால் மூன்று மாடிக்கு மேல் ஹோட்டல்கள் அமைப்பதற்கு அனுமதி இல்லாமலும் உள்ளது. இது போன்ற சிறிய விடயங்களால் அருகம்பை பிரதேசத்தில் சுற்றுலாத்துறை முன்னேற்றுவதற்கு நிறைய சவால்களை எதிர்நோக்கவேண்டிய நிலை காணப்படுகிறது. சம்மந்தப்பட்ட அமைச்சர் இவ்விடயத்தை உடனடியாக கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், மட்டக்களப்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக கெசட் செய்யப்பட்டிருப்பதுடன்கடந்தகா லங்களில் பல அபிவிருத்தித் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் பயணிகள் முனையம் வசதிகள் போதாமையால் விமானம் நிறுத்துவதற்கும் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத நிலையும் காணப்படுகிறது. இதனை சரி செய்ய முடியுமாக இருந்தால் சுற்றுலாப்பயணிகளை திருகோணமலை, பாசிக்குடா, பொலநறுவை, அருகம்மை பிரதேசங்களுக்கு நேரடியாக அழைத்து வரலாம் என்பதுடன் சுற்றுலாத்துறையினை கிழக்கு மாகாணத்தில் முன்னேற்றுவதோடு நாட்டினுடைய வருமானத்தையும் அதிகரிக்கலாம் என்றும் அவருடைய உரையில் குறிப்பிட்டார்.
No comments