கிழக்கு மாகாணத்தில் புலமைப் பரிசிலில் முதலிடம் பெற்ற பற்றிமா மாணவி கேசரஹர்சினிக்கு பாராட்டு மழை! வலயக்கல்விப் பணிப்பாளர் நஜீம் நேரில் சென்று பாராட்டு!!!
( வி.ரி.சகாதேவராஜா)
அண்மையில் வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 180 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட கல்முனை பற்றிமா கல்லூரி மாணவி கனகராசா கேசரஹர்சினியை (Miss.Kanakarasa Kessaraharsini) பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (29)புதன்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.
கல்லூரியில் தரம் -05 புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற 64 மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் அருட்.சகோ.S.E.றெஜினோல்ட் FSC தலைமையில் வெகுசிறப்பாக நேற்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின் போது 180 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவி கனகராசா கேஷாரஹர்ஷினி Kanakarasa Kessaraharsini அவர்களையும், வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்ற 64 மாணவர்களையும், மற்றும் 70 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்ற மாணவர்களையும் காலை ஒன்றுகூடலின் போது பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து 180 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவிக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் ஏனைய வலயக்கல்வி அதிகாரிகளினால் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதோடு பாடசாலையின் அதிபர் அருட்.சகோ.S.E.றெஜினோல்ட் FSC அவர்களையும், பகுதித் தலைவர் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் அனைவரையும் வாழ்த்திக் கௌரவித்தனர்.
சென்ற ஆண்டு பெற்றுக்கொள்ளப்பட்ட சித்தி வீதத்திலும் பார்க்க இவ்ஆண்டு 1.9 சதவீதத்தினால் கூடுதலான சித்தி வீதத்தினைப் பெற்றுள்ளதோடு மாகாணத்திலும் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டது மிகச் சிறப்பான அம்சமாகும்.
பணிப்பாளர் நஜீம் நேரில் சென்று விசேட பரிசு வழங்கி பாராட்டு!
வெளியான தரம் 5 புலமை பரீசில் பரீட்சையில் 180 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலாம் நிலையியை அடைந்து சாதனை படைத்த கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரி மாணவி கனகராசா கேசராஹர்சினியை (Miss.Kanakarasa Kessaraharsini) நேரில் சென்று வாழ்த்திப் பாராட்டுத் தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் மாணவிக்கு சிறப்பு பரிசினையும் வழங்கி கௌரவித்தார்.
பாடசாலைக்கு மட்டுமல்லாது கல்வி வலயத்திற்கும் கல்முனை பிராந்தியத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமையினையும் புகழையும் சேர்த்த மாணவியின் சாதனைக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் தனது வாழ்த்துக்கள் பாராட்டுக்களுடன் வழங்கிய பரிசானது பலரையும் கவர்ந்தது.
வித்தியாசமான சிந்தனையில் மாணவியின் புகைப்படத்துடன் அவரது சாதனை வரிகளையும் பதித்து தயாரிக்கப்பட்ட அட்டைப்படத்தினைக் கொண்ட அப்பியாசக் கொப்பிகளாக வழங்கப்பட்டமை பாடசாலைச் சமூகத்தினால் வியந்து பாராட்டப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்எச்.றியாசா,பிரதிக் கல்விப் பணிப்பாளரும் காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஆ.சஞ்சீவன் மற்றும் ஆரம்ப பிரிவுக்கான ஆசிரிய ஆலோசகர்களும் கலந்துகொண்டனர்.
No comments