திருமலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரதேச செயலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம்!!
( வி.ரி.சகாதேவராஜா)
திருகோணமலை முத்துநகர் பிரிவிலுள்ள உப்புவெளி கமநல அபிவிருத்தி பிரிவில் உள்ள சுமார் 1600 ஏக்கர் வயற்காணி திடீரென சோலர் பவர் சூரியமின்சக்தி உற்பத்தி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டு இருப்பதையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று (3).வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி பல வித பதாகைகளை தாங்கி இருந்தனர்.
இங்கு சுமார் 1200 விவசாயிகள் காலா காலமாக குறித்த 1600ஏக்கர் விவசாய நிலங்களை செய்கை செய்து வருகின்றார்கள். இதற்குள் 5 நீர்ப்பாசன குளங்களும் அடங்குகின்றன.
கடந்த வருடம் துறைமுக அதிகார சபையினர் சில பகுதிகளை தங்கள் பிரதேசம் என்று அடையாளம் படுத்தினர் . அதேவேளை தனியார் காணிகளும் இங்குள்ளன.
இந்த நிலையில் நேற்றும திடீரென்று துறைமுக அதிகார சபை அந்த நிலங்களை சோலபவர் சூரிய சக்தி மின் உற்பத்தி நிறுவனத்திற்கு விடுவிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தல் கிடைத்திருக்கின்றது.
இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.
இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை பிரதேச செயலகம் முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments