காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் வெள்ள அபாயம்!!!
( முஹம்மத் மர்ஷாத் )
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு அம்பாறை பிரதான வீதியில் மழை அதிகரித்த போது வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் சாத்தியம் காணப்படுகின்றது. இந்த இடத்தில் கடந்த வருடம் வெள்ளநீர் அதிகரித்ததன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டுனர்.
இக்காலப்பகுதியில் காரைதீவு தொடக்கம் மாவடிப்பள்ளி புதிய பாலம் முதல் காரைதீவு முச்சந்தி வரையிலுள்ள பிரயாணிகள் கடந்த காலங்களில் அவலங்களை எதிர் கொண்டதுடன் மரணங்களும் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மழை அதிகரிக்கும் போது வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவது மட்டுமன்றி பாம்பு, முதலை,ஆமை போன்ற ஆபத்தான உயிரினங்களின் தொல்லைகளாலும் மக்கள் அல்லல் படுவதும் குறிப்பிடத்தக்கது.
எனவே மழை அதிகரிக்கின்ற போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்தமையினால் அண்மையில் ஆறு மத்ரஸா மாணவர்கள் உட்பட எட்டு பேர் நீரில் மூழ்கி மரணமானதும் குறிப்பிடத்தக்கது.
No comments