பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் அனுமதிக்கப்படாது ;இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு!!
இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் அனுமதிக்கப்படாதென, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.
கையடக்க சாதன உபகரண அடையாள எண் (International Mobile Equipment Identity (IMEI) பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை நேற்று 28 முதல் இயங்க அனுமதிப்பதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கையடக்க தொலைபேசிகள், கம்பி தொடர்பற்ற வலையமைப்புக்கள், ட்ரோன்கள்,ரேடார் உட்பட ரேடியோ அலைகளின் பிற உபகரணங்கள், பல்வேறு தொழில்துறை மற்றும் மருத்துவ பயன்பாடு உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை சட்டபூர்வமாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதன் மூலம் முறையான அனுமதியைப் பெற முடியும். இதன் மூலம் சான்றளிக்கப்பட்ட இலத்திரனியல் சாதனங்களை பயனாளர்களுக்கு வழங்குவதே ஆணைக்குழுவின் நோக்கமாகும்.
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களை கொள்வனவு செய்வதில், ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் சட்டவிரோத இறக்குமதிகளை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், இலங்கையில் மொபைல் சாதன கண்காணிப்பை நெறிப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் உள்ளூர் வலையமைப்புகளை அணுகுவதிலிருந்து அங்கீகரிக்கப்படாத அல்லது திருடப்பட்ட சாதனங்களை தடுக்க உதவுகிறது. நாட்டில் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெருமளவான இலத்திரனியல் சாதனங்கள் பதிவு செய்யப்படாமலுள்ளன. இத்தகைய சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதால் அரசாங்கம் வரி வருமானத்தை இழக்க நேரிடுகிறது.
பதினைந்து இலக்க சர்வதேச கையடக்க உபகரண எண் (IMEI) என்பது ஒவ்வொரு தொலைபேசிக்கும் வழங்கப்படும் தனித்துவமான எண்ணாகும். கையடக்க தொலைபேசியிலுள்ள keypad இல் *#06# என உள்ளிடுவதன் மூலமும் இதை கையடக்க தொலைபேசியின் திரையில் காண்பிக்க முடியும்.
No comments