காரைதீவு நேரு சனசமூக நிலைய வருடாந்த ஒன்றுகூடல் : பவள விழா ஏற்பாடுகள் மும்முரம்
காரைதீவு நேரு சனசமூக நிலையத்தின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்கான பெயர் பலகை திறப்பு வைபவம் ஆகியன சனிக்கிழமை நிலைய வளாகத்தில் இடம்பெற்றன.
நிலையத்தின் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் முன்னெடுப்பில் இடம்பெற்ற இவ்விழாக்களில் நிலையத்தின் போசகர், மூத்த இலக்கியவாதி ஊடகவியலாளர் கலாபூஷண எஸ். நாகராசா அடங்கலாக நிலையத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் மகத்தான பங்களிப்புகளை முன்னின்று வழங்கி வருகின்ற செயற்பாட்டாளர்கள் விசேடமாக கௌரவிக்கப்பட்டார்கள்.
அதே போல நிலைய உறுப்பினர்களுடைய பிள்ளைகள் கல்வி சாதனைகளுக்காக பரிசில்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டார்கள். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 150 புள்ளிகளை பெற்று சித்தி அடைந்த சாதனை மாணவி தர்மேதா தர்மேந்திரா பரிசு வழங்கப்பட்டு, பதக்கம் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
நேரு சனசமூக நிலையம் கடந்து வந்து கொண்டிருக்கின்ற மிக நீண்ட வரலாறு, அது தொடர்ந்தேச்சையாக காரைதீவு பிரதேச மக்களுக்கு ஆற்றி வருகின்ற சேவைகள், ஆழிப்பேரலை அனர்த்தம் அடங்கலாக அனர்த்தங்களின்போது அர்பணிப்புடன் ஆற்றிய - ஆற்றி வருகின்ற சமூக பணிகள் ஆகியவற்றை பேராளர்கள் வியந்து பாராட்டினார்கள். எதிர்காலத்தில் இன்னும் கூடுதல் உத்வேகத்துடன் நேரு சனசமூக நிலையம் செயல்படும் என்று நம்பிக்கை வெளியிட்டார்கள். 75 ஆண்டு நிறைவு விழாவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
No comments