Vettri

Breaking News

மண்டூர் மகாவித்தியாலயத்தில் எழுத்தறிவு மையம் திறந்துவைப்பு!!





செ.துஜியந்தன்  

பட்டிருப்புக்கல்வி வலயத்தின் போரதீவுப்பற்றுக்கோட்டத்திலுள்ள மண்டூர் மகா வித்தியாலயத்தில்  அதிபர் புத்திசிகாமணியின் தலமையில் முறைசாராக்கல்விப்பிரிவின் ஒழுங்கமைப்பில்  எழுத்தறிவு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன்  கலந்து கொண்டார். அத்துடன் முறைசாராக்கல்விப்பிரிவின் இணைப்பாளர் திருமதி.றீ.கலைச்செல்வன், அயற்பாடசாலையின் அதிபர் சத்தியமாறன், பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர், உறுப்பினர்கள்,பழையமாணவர் சங்கத்தலைவர், பழையமாணவர்கள்,பெற்றார்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள்,முறைசாராக் கல்விப்பிரிவால் பரிகாரக்கற்பித்தல் செயற்பாட்டுக்காக பயிற்றுவிக்கப்பட்ட எழுத்தறிவு மையத்தின் பொறுப்பாசிரியரான அபிவிருத்தி உத்தியோகத்தர் மயூறுதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
 இங்கு பரிகாரக் கற்பித்தல் கற்றல் செயற்பாடுகளுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களும்  வழங்கிவைக்கப்பட்டது. இதன்மூலம்  மண்டுர் பிரதேச ஊட்டப்படசாலைகளிலுள்ள மெல்லக்கற்கும்,கற்றலிடர்பாடுடைய மாணவர்கள் இந்த எழுத்தறிவு மையத்தைப்பயன்படுத்தி பயனடைய முடியும் . எழுத்தறிவு எண்ணறிவில் இடர்படும் மாணவர்களுக்கு சிறந்த பரிகாரக்கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து கற்றல் இடர்பாட்டை களைந்து அந்தமாணவர்களையும் மீத்திறனுடைய மாணவர்களாக மாற்றவேண்டும் எனவும் இதன்மூலம் கற்றலில் ஆர்வம் ஏற்பட்டு வரவு ஒழுங்கீனம்,இடைவிலகல் தவிர்க்கப்படும் எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் கூறினார்.

இந்நிலையத்தில் முறைசாராக்கல்விப்பிரிவால் தரம்
 2 - 5வரை நடாத்தப்பட்ட எழுத்தறிவு எண்ணறிவு மதிப்பீட்டில் குறைவான புள்ளிகளைப்பெற்ற மாணவர்களும்,தரம் 4 இற்கு மாகாணமட்டத்தில் நடாதப்பட்ட பரீட்சையில் 69 இற்கு குறைவான புள்ளிகளைப்பெற்ற மாணர்களும் என 21 மாணவர்கள் பரிகாரக்கற்பித்தல் செயற்பாடுகளுக்காக இணைப்புச்செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு வலயத்திலுள்ள 70 படசாலைகளிலும் மெல்லக்கற்கும் மாணவர்கள் இனங்காணப்பட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் பரிகாரக்கற்பித்தல் செயற்பாடுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு,எழுத்தறிவு வகுப்புக்களுக்கு பொறுப்பாக. அவர்கள் நியமிக்கப்பட்டு எழுத்தறிவு வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றமையும் அது முறைசாராக்கல்விப்பிரிவால் அவதானிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது

No comments