சுமார் 05 கோடி ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களில் இடம்பெற்ற மோசடிகள் ; கேள்வியெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்!!
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (16) பிரதேச செயலாளர் PTM இர்பான் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்றிருந்தது.
இதன் போதே அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அவர்களினால் அட்டாளைச்சேனை பிரதேச வீதிகள், வடிகான்கள் அபிவிருத்திகள் சம்பந்தமாக முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், கடந்த 2024 ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அதி விஷேட வர்த்தமானியின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் நடைமுறைப்படுத்துப்பட்ட ஒலுவில் - 01, அல்- ஹிரா நகர், ஆலிம் நகர் போன்ற பிரதேசங்களின் 16 கிறவல் வீதி அபிவிருத்திகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரினால் கேள்வியெழுப்பப்பட்டிருந்ததுடன் இதுவிடயம் தொடர்பிலான தகவல்களையும் விளக்கங்களையும், ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆதம்பாவா அவர்களிடம் இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
மேற்படி வீதி அபிவிருத்திகள் தொடர்பில் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையில் எதுவித அனுமதிகளும் பெறப்படவில்லையென தெரியவந்ததுடன் கிரவல் வீதிகளுக்கு மேலால் மீண்டும் கிறவல்களை போட்டு மக்கள் வரிப்பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் கண்டித்து பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments