தீர்வுக்கான பேச்சுவார்த்தை வருகின்ற போது அரசாங்கமும், தமிழர்களும், முஸ்லிங்களும் சமமாக இருந்து பேச வேண்டும் : கிழக்கின் கேடயம்!!
நூருல் ஹுதா உமர்
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் இந்திய விஜயத்தை தொடர்ந்து நாடுபூராகவும் புரையோடிப்போன பிரச்சினைகளுக்கு சமஸ்டி தீர்வு முன்வைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணமுள்ளது. எமது நாட்டில் தீர்க்கப்படாமல் பல பிரச்சினைகள் பல தசாப்தங்களாக தேங்கி கிடக்கிறது. அவற்றுக்கு ஒரு தீர்வு பொறி முன்வைக்கப்பட வேண்டும் என்றால் அரசாங்கத்துடன் தமிழர் தரப்பும், முஸ்லிம் தரப்பும் ஒரே மேசையில் இருந்து பேசி தீர்க்க வேண்டும் என கிழக்கின் கேடயம் பிரதானியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.(17) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஒரு தீர்வு பொறி முன் வைக்கப்பட வேண்டியது சில நாடுகளின் அழுத்தத்தினாலோ அல்லது சில குழுக்களின் தேவைகளுக்காகவோ தீர்மானிக்க முடியாது. பேச்சுவார்த்தைகளின் போது கட்டாயம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அந்த பேச்சுவார்த்தை மேசையில் இருக்க வேண்டும். அதனூடாகத்தான் யாருக்கும் பாதகமில்லாத தீர்வை பெற முடியும். யாருக்காவது நியாயமான தீர்வுகள் கிடைக்காத போது அது இன்னொரு போராட்டத்தை நோக்கி இழுத்துச் சென்றுவிடும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.
பாசிஸ புலிகளின் கொள்கையிலிருந்து மாறாதவர்கள் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும், தமக்கு மட்டும் சமஸ்டி தீர்வு கிட்ட வேண்டும், இணைந்த வடகிழக்கில் சமஸ்டி என்றெல்லாம் பேசுகிறார்கள். இன்று உலகம் நவீனத்துவமடைந்து எவ்வளவு தூரம் வளர்ந்து விட்டது. இலங்கையை பொறுத்தமட்டில் ஒற்றையாட்சி போதுமானது. இங்கு காணப்படும் வருமான ஏற்றத்தாழ்வை இல்லாமலாக்கி சகல குழந்தைகளும் ஒரே மொழியில் கல்வி கற்றால், எல்லோரையும் சமனாக நடத்தும் திருத்தம் அரசியல் அமைப்பில் கொண்டுவரப்பட்டால் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
மூன்று தசாப்த போராட்டத்திற்கு ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்றால் அங்கு ஒரே மேசையில் பேசி தீர்வுகள் எட்டப்பட வேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிங்கள் புறக்கணிக்கப்பட்ட போதும் கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்கள் சம்மேளனத்தினூடாக நாங்கள் அதை வலியுறுத்தினோம். பேச்சுவார்த்தை என்று வருகின்ற போது அரசாங்கமும், தமிழர்களும், முஸ்லிங்களும் சமமாக இருந்து பேச வேண்டும் என்றார்.
No comments