மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நீதி கிடைக்கப்பெற வேண்டும்-முகம்மட் ரஸ்மின்
பாறுக் ஷிஹான்
தேர்தல் காலங்களில் மட்டும் மைக் முன்னால் பேசிவிட்டு இலட்சக் கணக்கில் செலவிடுகிறார்கள் .ஒரு சிலர் உதவி செய்கின்றார்கள். தவிர இன்னும் பலரை காண முடியவில்லை.இந்த விடயத்தில் இன ஜாதி மதம் பாக்க முடியாது.அனர்த்தம் என்பது யாவருக்கும் சமம்.பசி என்பது எல்லோருக்கும் பொதுவானது.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நீதி கிடைக்கப்பெற வேண்டும் என 'வி ஆ வண்'( WE ARE ONE ) அமைப்பின் இணைப்பாளர் முகம்மட் ரஸ்மின் குறிப்பிட்டார்.
அண்மையில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குதல் மற்றும் மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் உயிரிழந்த மாணவர்களின் ஜனாசா வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறிய பின்னர் இன்று ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் ஆக்ரோசமாக மேலும் தெரிவிக்கையில்…
சில நாடுகள் இராணுவ பயிற்சியை கட்டாயமாக்கி உள்ளன. இயற்கை அனர்த்தங்கள் போன்ற செயற்பாடுகளுக்கு முகம் கொடுப்பதற்காக அந்நாடுகள் இவ்வாறு பயிற்சிகளை கட்டாயமாக்கி வைத்திருக்கிறார்கள்.அது மாத்திரமன்றி பாடசாலைகளிலும் இவ்வாறான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இலங்கையில் பிரபலமான பாடசாலைகளில் நீச்சல் குளங்கள் இருக்கின்றது. அவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்கப்படுகின்றது. இதர பயிற்சிகள் எல்லாம் உள்ளன.
அம்பாறை மட்டக்களப்பு வன்னி உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் உள்ள பகுதிகளிலும் பெரும்பான்மை மக்கள் வாழுகின்ற சேருநுவர போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மேற்கூறிய வசதிகளை இல்லை. ஆனால் இங்கு கடல் ஆறு உள்ளன. பயிற்சிப்பாளர்கள் ராணுவத்தினர் அப்பகுதிகளில் மாணவர்களை பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும். விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். வெள்ள அனர்த்தங்கள் எவ்வாறு ஏற்படுகின்றது எவ்வாறு தடுப்பது போன்ற திட்டங்களை இதனூடாக மிகச் சிறப்பாக செயல்படுத்த முடியும். இதில் அரசாங்க உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் .இனிவரும் காலங்களில் இவ்வாறான அழிவுகளில் இருந்து பாதுகாப்பு பெற வேண்டும்.
இனிவரும் காலங்களில் பெரிய புயல்கள் வர காத்திருக்கின்றது. தற்போது அது தொடர்பான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது. இதுதவிர தமிழகத்தின் தென்கோடி கேரளா உட்பட சில பகுதிகளுக்கு இந்த பாதிப்புகள் வர இருக்கின்றது. இந்த நிலையில் அந்த நாடுகள் எவ்வாறு முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள் என்பது தொடர்பாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இன்று அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு உதவிகளை செய்து செய்து வருகிறோம்.
மாவட்டத்தின் முழு பகுதிகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது .உச்சகட்டமாக சம்மாந்துறை பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. அதிலும் அரபுக் கல்லூரியில் கல்வி கற்ற ஆறு மாணவர்கள் உட்பட ஏனைய இருவர் மரணம் அடைந்து சோக சம்பவமும் பதிவாகி இருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொடக்கம் கடைக்கோடி வரையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றது அல்லாஹ்வின் உதவினாலும் எமது முயற்சியினாலும் பாலஸ்தீன மக்களின் காணொளிகளை பார்க்கின்றவர்கள் அதன் அனுதாபிகள் செய்த உதவிகளின் ஊடாக இன்று பொத்துவில் நிந்தவூர் சம்மாந்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் பல்வேறு உலர் உணவுப் பொருட்களை கொடுத்து வருகின்றோம்.
இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டு காட்டலாம் என்று நினைக்கின்றேன். எமது நாட்டில் ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தலில் எல்லா பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 60க்கும் மேற்பட்ட கட்சிகள் சுயேட்சை குழுக்கள் போட்டியிட்டன. குறிப்பாக எம்பிக்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் கூட குறிப்பாக வாய்க்காலில் தண்ணீர் செல்கிறதா நீர் எங்கு செல்கின்றது என்பதைத்தான் பார்க்கின்றார்கள். அந்த விடயங்களை அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தான் பார்ப்பார்கள்.
நாங்கள் பார்க்க வேண்டியது என்னவென்றால் மக்கள் சாப்பிடாமல் இருக்கிறார்களா? அவர்களுக்கு எவ்வாறான வழியில் உதவி செய்ய வேண்டும். உணவில்லாமல் இருக்கிறார்களா? தங்குவதற்கு இடம் இல்லாமல் இருக்கிறார்களா?என்று ஆராய வேண்டும்.
தேர்தல் என்று வருகின்ற போது மக்களுக்காகவே நாங்கள் செலவு செய்கிறோம் என்று இலட்சக் கணக்கில் செலவிடுகிறார்கள். அவ்வாறு செலவு செய்பவர்கள் இவ்வாறான விடயங்களில் தான் செலவழிக்க வேண்டும். இவ்வாறான நிலைமைகளில் கூட மக்களோடு மக்களாக ஒரு சிலர் உதவி செய்கின்றார்கள். தவிர இன்னும் பலரை காண முடியவில்லை.இந்த விடயத்தில் இன ஜாதி மதம் பாக்க முடியாது.அனர்த்தம் என்பது யாவருக்கும் சமம்.பசி என்பது எல்லோருக்கும் பொதுவானது.
இவ்விடயத்தில் அனைத்து தலைவர்களும் சமூகவியலாளர்களும் ஒன்றாக செயல்படுகின்ற போது நிறைய நன்மைகள் எம்மக்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்டெடுப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. எனவே தேர்தல் காலங்களில் மட்டும் மைக் முன்னால் பேசிவிட்டு முகநூலில் புகைப்படங்களை பதிய விட்டு நாங்கள் அங்கு போனோம் இங்கு போனோம் என்று செய்திகளை வெளியிடாது இந்த விடயத்தில் வாரி வழங்க முன் வர வேண்டும்.
சம்மாந்துறை மண்ணில் நடந்த ஒரு அனர்த்தம் ஆறு மதரசா மாணவர்கள் உட்பட எட்டு பேர் மரணமடைந்த சம்பவம் ஏற்க முடியாதது.கட்டுக்கடங்காத வெள்ளத்தினால் இந்த சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. நான் இங்குள்ள சகல ஜனாஸா வீடுகளுக்கும் சென்று இருந்தேன். அவ்வாறு சென்ற பின்னர் அங்கு அந்த வீடுகளில் கூறப்பட்ட ஆதங்கங்களை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். முக்கியமான சம்பவம் ஒன்று இந்த பிரதேசத்தில் நடைபெற்று இருக்கின்றது. ஆனால் எந்த ஒரு ஊடகத்திலும் இந்த விடயம் பேசப்படவில்லை.இதனால் ஒரு சந்தேகம் எழுகின்றது.அதாவது சம்பவம் இடம் பெற்ற மறுநாள் தான் பாதுகாப்பு படையினர் மீட்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கின்றார்கள்.
என்ற விடயத்தை மையத்து வீடுகளுக்கு செல்கின்ற போது நான் அறிந்து கொண்டேன்.
ஆனால் இங்கு கடல் பகுதி உள்ள பிரதேசம் அதிகளவான மீனவர்களை கொண்ட பகுதி இங்கே எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழ் சகோதரர்கள் கூட நாங்கள் இந்த விடயத்தில் உதவி செய்ய முன்வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அங்கு பாதுகாப்பு காரணங்களை காட்டி அவர்களை மீட்பு பணியில் அனுமதிக்காதமை இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியதுதான். எனவே இந்த மீனவர்களை அனுமதித்து இருந்தால் மீட்பு பணி சுலபமாக இருந்திருக்கும். ஆனால் பாதுகாப்பு தரப்பினர்கள் எந்தவித செயல்பாடுகளை முன்னெடுக்காமல் கைகட்டி பார்த்துக் கொண்டிருந்ததாக பொதுமக்கள் குற்றம் சுமத்தி இருக்கிறார்கள்.எனவே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நீதி கிடைக்கப்பெற வேண்டும் என குறிப்பிட்டார்.
No comments