Vettri

Breaking News

வரி செலுத்துவதற்கு இலகு வழி!!




 மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வரிப் பணத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த வரி செலுத்தும் நடவடிக்கையை மேலும் இலகுபடுத்துவதற்காக வரி செலுத்துவோர் தங்களின் வீடுகளில் இருந்தவாறே  வரி செலுத்த தேவையான வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்படும்  எனத் தெரிவித்த   கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி வாடகைக்  கட்டிடங்களில் இருக்கும் அனைத்து அமைச்சுக்களின் நிறுவனங்களையும் அரச கட்டிடங்களின் கீழ் கொண்டுவர  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (05)சமர்ப்பிக்கப்பட்ட கணக்குவாக்குப்பதிவு  மீதான விவாதத்தில்   உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர்  தொடர்ந்து உரையாற்றுகையில்,

 வரி செலுத்தாதவர்கள் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர்  செலுத்துவதற்கு  இறுதி திகதி ஒன்றை நாங்கள் அறிமுகப்படுத்தி இருந்தோம். அந்த காலப்பகுதியில் வரி செலுத்துவதற்கு மக்கள் வரிசையில் நின்றனர் மக்கள் வரி செலுத்த தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் செலுத்தும் வரி பணத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் என்ன என்பது தொடர்பில் அவர்களுக்கு தெரியாமல் இருந்தது. அதனால் வரிசெலுத்துவோர் அதனை செலுத்துவதை தவிர்த்து வந்தார்கள்.

ஆனால் தற்போது மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வரி பணத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த வரி செலுத்தும் நடவடிக்கையை மேலும் இலகுபடுத்துவதற்காக வரி செலுத்துவோர் தங்களின் வீடுகளில் இருந்தவாறே  வரி செலுத்துவதற்கு தேவையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்  

  மக்களின் வரி பணத்தை   நாங்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பான ஜனாதிபதியின் பதவி ஏற்கும் நிகழ்வு, அமைச்சர்களின் பதவி ஏற்கும் நிகழ்வு மிகவும் எளிமையாக இடம்பெற்றது. இதுவே கடந்த அரசாங்கமாக இருந்தால், மக்களின் வரிப்  பணத்தை இதற்காக பாரியளவில் செலவழித்திருப்பார்கள். அதேபோன்று அமைச்சுக்களின் அதிகமான நிறுவனங்கள் வாடகை கட்டிடங்களிலேயே இருந்துள்ளன. அதற்காக பாரியளவில் வாடகை செலுத்தப்பட்டு வந்துள்ளன.

 குறிப்பாக எனது அமைச்சுக்கு கீழ் இருக்கும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை கட்டிடத்தின்  மாத வாடகையாக 50 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டு  வந்துள்ளது. அதனால் வாடகைக்  கட்டிடங்களில் இருக்கும் அனைத்து அமைச்சுக்களின் நிறுவனங்களையும் அரச கட்டிடங்களின் கீழ் கொண்டுவர  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  

மேலும் சார்ள்ஸ் எண்ட் டிபல் சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணிகளுக்கு பாரியளவில் கட்டணம் செலுத்துவதாக எங்கள்  மீது குற்றம் சாட்டுகின்றனர் . சர்வதேச நாணய நிதியத்தின் சட்டத்தரணிகளாக சார்ள்ஸ் என்ட் டிபல் சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணிகளை  இணைத்துக்கொண்டது நாங்கள் அல்ல. ஆனால் அந்த நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்துவதற்கு சட்ட ரீதியில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.   கடந்த அரசாங்கம் செய்த சில பாவங்களை விரும்பாவிட்டாலும் நாங்களும் சுமக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என்றார். 

No comments