சமூக அபிவிருத்தி அமையம் குடிநீர் வழங்க நடவடிக்கை!!
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் குடிநீர் வழங்கும் திட்டமொன்றை சமூக அபிவிருத்தி அமையம் முன்னெடுத்து வருகின்றது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர்வழங்கல் குழாயில், வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் காரைதீவு, நிந்தவூர் மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களுக்கான குடிநீர் வழங்கல் கடந்த ஐந்து தினங்களாக பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, காரைதீவு பிரதேச செயலகம் என்பன இணைந்து மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு புவுசர்கள் மூலமாக குடிநீர் வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தது. இச்செயற்பாடுகளை மேலும் இலகுபடுத்தி மக்களுக்கு பாதுகாப்பான தூய குடிநீரை வழங்கும் பொருட்டு சமூக அபிவிருத்தி அமையம் குடிநீர் வழங்கல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதனடிப்படையில், பிரதேச செயலகத்தின் உதவியுடன் காரைதீவு பிரதேச செயலத்திற்குட்பட்ட மாளிகைக்காட்டில் 10 இடங்களிலும் காரைதீவு பிரதேச செயலகம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் காரைதீவு வைத்தியசாலை ஆகிய இடங்களிலும் பாதுகாப்பான குடிநீர் தாங்கிகளை வைத்து, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பவுசர் மூலம் குடிநீர் வினியோக நடவடிக்கையை தொடர்ச்சியாக செயற்படுத்தி, கண்காணித்து வருகின்றது.
தற்போது நிலவும் வெள்ள அனர்த்த சூழலில், இக்குடிநீர் வழங்கல் மூலம் சுமார் 1500 குடும்பங்கள் நன்மையடைந்து வருவதுடன், இச்செயற்பாடுகள் யாவும்
காரைதீவு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்கள் மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments