திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட மியன்மார் அகதிகள் படகு!!
முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னதாக முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் இப்படகு 102 பேருடன் நேற்று (19) கரை ஒதுங்கியது. குறித்த இப்படகு திசைமாறி வந்து கரையொதுங்கியதாகவும், இப்படகில் 35 சிறுவர்களும், ஒரு கற்பிணி தாயும் உள்ளனர் எனவும் அறிய முடிகின்றது.குறித்த படகில் இருப்பவர்களுக்கு உணவுகள், குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் இதில் உள்ள சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்றும் உள்ளனர்.
மொழி பிரச்சினை காரணமாக குறித்த நபர்களிடமிருந்து சரியான தகவல்களை தற்போது பெற்றுக் கொள்ள முடியவில்லை. அத்துடன் இவர்கள் இலங்கைக்கு குடியேறத்தான் வந்தார்களா? என்ற சந்தேகமும் நிலவுகின்றது.
இப்படகினை முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரைசேர்ப்பதில் சிரமங்கள் இருந்தமையினால் இப்படகு திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிய வருகின்றது. இதற்கான ஏற்பாடுகள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் குறித்த ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தது.
படகில் உள்ளவர்களை முதலில் பாடசாலை ஒன்றில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன் சுகாதரத்துறையினர் உட்பட அதனுடன் தொடர்புடைய திணைக்களங்கள் இவ்விடயம் தொடர்பில் தயார் நிலை வைக்கப்பட்டுள்ளது என தெரிய வருகின்றது.
No comments