ஜனாதிபதி மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கிடையில் சந்திப்பு!!
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் மாதங்களில் நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக அரிசி வழங்க வேண்டியதன் அவசியத்தை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களிடம் எடுத்துரைத்த ஜனாதிபதி, அதற்காக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடினார்.மக்களுக்கு தட்டுப்பாடின்றி அரிசியை வழங்கும் வகையில் நாட்டில் களஞ்சிய வசதிகளை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, பெறுமதி சேர்க்கும் உற்பத்திகளுக்கு நாட்டு அரிசியை பயன்படுத்துவதால், நுகர்வுக்கு தேவையான இருப்புகளில் தட்டுப்பாடு நிலவுவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
உர மானியத்தை தேசிய உற்பத்திக்கான செயற்திறனுடன் பயன்படுத்தும் நோக்கில் கியூ.ஆர். குறியீட்டு முறைமை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதி கவனம் செலுத்தினார்
No comments