அம்பாறை மாவட்ட கிட்டங்கி மற்றும் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் வலுவான தடுப்புகள் அமைக்க நடவடிக்கை : வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கோரிக்கை !
மாளிகைக்காடு செய்தியாளர்.
அம்பாறை மாவட்டம் கிட்டங்கி மற்றும் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் அடிக்கடி நடைபெறும் உயிரிழப்புக்களையும், விபத்துக்களையும் கட்டுப்படுத்த குறித்த பிரதேசங்களில் வீதிப்பாதுகாப்பு தடுப்புக்களை ஏற்படுத்துவதுடன் அகலமாக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு கேட்டு ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை தவிசாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மாவடிப்பள்ளி, கிட்டங்கி ஆகிய இரு இடங்களில் மாவடிப்பள்ளியில் 6 சிறுவர்கள் மற்றும் 2 பெரியவர்கள் மற்றும் அம்பாறை மாவட்டம் கிட்டங்கியில் ஒருவர் உட்பட 9 பேர் உயிரிழந்தமை வருத்தமளிக்கும் ஒன்றாகும். இது போன்று அடிக்கடி குறித்த பிரதேசங்களில் உயிரிழப்புக்கள் நடைபெறுவது வழமையாகி வருகிறது. முக்கியமாக குறித்த இந்த இரண்டு இடங்களின் பாலங்கள் எதிர்காலத்தில் விபத்துக்களையும், மரணத்தைத் தவிர்க்கும் விதமாக மாற்றி அமைக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம் பெறுகிறது என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ஒவ்வொரு இடத்தின் இருபுறமும் பாலத்தில் இருந்து சாலை வரை 500 மீட்டர் தூரத்திற்கு வலுவான தடுப்புகள் அமைப்பதுடன், வெள்ள அளவைக் குறிப்பதுடன், எதிர்காலத்தில் இப்பகுதி மற்றும் பிற பகுதிகளின் பயணிகளின் இத்தகைய மரணங்கள் கடுமையாகத் தவிர்க்கப்படும். தென்கிழக்கு பிராந்திய கடலோரப் பகுதியை முழு அம்பாறை மாவட்டம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் இந்த சாலைகள் இணைக்கும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் பருவகால வெள்ளம் காரணமாக, இந்த இடங்களில் ஏதேனும் ஒன்றில் அல்லது இரண்டு இடங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமான மரணத்துடன் நடைபெறுகின்றன.
எனவே, உங்கள் தொழிநுட்ப பிரிவை கொண்டு இப்பகுதியின் செயல்பாட்டு சூழலை ஆய்வு செய்து, இரண்டு பாலங்களுக்கும் மிகவும் வலுவான தடுப்புகளை அமைக்க அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம், இப்படி பாதுகாப்பை வழங்கும் போது நீர் வடிந்தோட இடையூறு இல்லாமல் இருப்பதுடன் எதிர்காலத்தில் இப்பகுதி பயணிகளின் விபத்து மற்றும் மரணத்தைத் தவிர்க்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பயணிகளின் நன்மை கருதியும், யானைத் தொல்லைகளை கவனத்தில் கொண்டும் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் பலரும் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக அம்பாறை- காரைதீவு வீதியில் காரைதீவு, மாவடிப்பள்ளி பிரதேசத்தில் பிரமாண்ட ஒளியூட்டும் மின் விளக்குகள் பொறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments