பிரதான நீர்க்குழாய்த்திருத்தம் பூர்த்தி; இன்று விநியோகம் வழமைக்கு திரும்பலாம்!!
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உடைத்தெறியப்பட்ட பிரதான நீர்க் குழாய்களின் முக்கிய திருத்த வேலைகள் பூர்த்தியாகியுள்ளன.
கடந்த பன்னிரண்டு நாட்களாக நயினாகாட்டுப் பகுதியில் பிரதான குழாய்கள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் இரவு பகலாக திருத்தம் செய்யப்பட்டு வந்தது.
இன்று (7) சனிக்கிழமை பகல் குறித்த குழாய்கள் திருத்திப் பொருத்தும் பணி நிறைவு பெற்றிருக்கின்றன.
குறித்த குழாய்கள் எதிர்வரும் வெள்ள அனர்த்தத்தின்போது சேதமடையாமல் இருக்க உரிய தடுப்புஅணை நடவடிக்கைகள் நேற்று எடுக்கப்பட்டன.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஹைதர்அலி, பொறியியல் பிரிவுப் பொறியியலாளர் தாமோதரம் வினாயகமூர்த்தி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் நேற்றும் களத்தில் நின்று இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
கடந்த 12 நாட்களாக தண்ணீர் இன்றி 28 கிலோமீட்டர் நீளமுள்ள பிரதான குழாய்கள் இருந்தன. அவற்றில் முதலாவது தண்ணீர் ஏற்றி பரிசோதிக்கும் சோதனை நிகழ்வும் இடம்பெற்றது.
அனைத்தும் பூர்த்தியாகும் பட்சத்தில் நாளை (8) ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் குடிநீர் விநியோகம் வழமைபோல் இடம்பெறலாமென கூறப்படுகிறது.
கடந்த 12 நாட்களாக நிந்தவூர் காரைதீவு மாளிகைக்காடு சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் குழாய் நீர் விநியோகம் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
குறிப்பாக காரைதீவுக் கிராமத்திற்கு குழாய் நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments