Vettri

Breaking News

பொன்விழா சேவையை ஆற்றிய மூத்த சமூக சேவையாளர் முனியாண்டி புதிய வளத்தாப்பிட்டியில்கௌரவிப்பு!






( வி.ரி.சகாதேவராஜா)

புதிய வளத்தாப்பிட்டி மக்களின் நலனுக்காக கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அரும்பாடுபட்ட சமுக சேவகரும், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைவரும், சங்கங்களின் முன்னாள் தலைவரும், சமாதான நீதவானுமான குமரன் முனியாண்டி அவர்களை வாழ்த்திப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை மாலை புதிய வளத்தாப்பிட்டியில் கோலாகலமாக நடைபெற்றது .

சம்மாந்துறைப் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளரும் மல்வத்தை பிரதேச சமுதாய அடிப்படை அமைப்புகளின் ஒன்றியத்தின் செயலாளருமான வி. ஜெயச்சந்திரன் மற்றும் புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வு நாவலர் சனசமூக நிலையத்தில் ஜெயச்சந்திரன் தலைமையில் மிக விமரிசையாக இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல் முஹம்மது ஹனீபா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வளத்தாப்பிட்டி கிராமத்தின் மீள் குடியேற்றத்திற்காகவும் அவ் மக்களின் சமூக நலன்களிலும் அக்கறை செலுத்தி,அந்த மக்களுக்காக அரும்பாடுபட்ட குமரன் முனியாண்டி அவர்களை "வாழும்போதே வாழ்த்திக் கெளரவிக்க வேண்டும் ",என்று அந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந் நிகழ்வில் குமரன் முனியாண்டி அவர்களின் துணைவியார் பூங்கொடியும் பாராட்டி கெளரவித்தமையும் சிறப்பம்சமாக காணப்படுகின்றது.


இந்நிகழ்வில் பாராட்டப்பட்ட முனியாண்டி காரைதீவு மக்களுக்கு  நன்றி சொன்னார்.

79 வயதை கடந்து வாழும் திரு முனியாண்டி அவர்கள். அம்பாறை நகரில் தொடங்கிய தனது சமூக சேவையை தொடர்ந்து அம்பாறை உட்பட ஏழு கிராம மக்கள் காரைதீவு அகதி முகாமில் காரைதீவு பிரதேசத்தில்  04  வருடங்கள் அகதிகளாக வாழ்ந்த காலப்பகுதியிலும் தொடர்ந்து புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் குடியமர்த்தப்பட்டு கடந்த ஓரிரு வருடங்கள் வரை தனது சமூக சேவையை சுமார் 50 வருடங்களுக்கு மேல் செய்து வந்துள்ளார். 

அம்பாறை நகரில் வாழும் காலத்தில் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடன் முன்வந்து நிற்கும் திரு முனியாண்டி அவர்கள் 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன் செயலில் அம்பாறை மக்கள் உட்பட வளத்தாப்பிட்டி மல்வத்தை திராய்க்கேணி  அட்டப்பள்ளம் உட்பட ஏழு கிராம மக்கள் காரைதீவில் அகதிகளாக தஞ்சமடைந்து நாலு வருடங்கள் வாழ்ந்த காலப் பகுதியில் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டது இராணுவத்தினரின் சுற்றிவளைப்பு முகமூடி காட்டிக் கொடுப்பாளர்களால் காட்டி கொடுத்து கொண்டு செல்லப்பட்ட இவ் ஏழு ஊர் மக்களை இராணுவத்தினருடனும் அக்காலப் பகுதியில் இருந்த விசேட அதிரடிப்படையியிருனும் வாக்குவாதம் செய்து காப்பாற்றி இருக்கிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு எஸ்டிஎப் அதிகாரி இவரை கன்னத்தில் அறைந்த போது கண்ணீர் விட்டு அங்கு அவர் கூறிய பதிலால் அந்த விசேட அதிரடிப்படை மேலதிகாரி அவரிடம் மன்னிப்பு கேட்ட சந்தர்ப்பமும் உண்டு. 

இந்த முனியாண்டியை தெரியாத  மேலதிகாரிகள் இல்லை. என்னை இதுவரை எந்த ஒரு நபரும் கை நீட்டியதில்லை உனது தந்தையின் வயதுள்ள என்னை கைநீட்ட உனக்கு எப்படி மனம் வந்தது என்று தைரியமாக சிங்களத்தில் கேட்ட போது அந்த அதிகாரி மன்னிப்பு கேட்டதை பலர் அறிவார்கள்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.ஹனிபா அவர்கள் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தின் பொதுச் சங்கங்களின் தலைவர் செயலாளர் பொருளாளர் உட்பட நிர்வாகிகள் மற்றும் புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தின் மக்கள் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தனது சமூக சேவை காலத்தில் தனக்கு உதவி செய்த அனைவருக்கும் திரு முனியாண்டி அவர்கள் நன்றி கூறியதோடு 
விசேடமாக காரைதீவு அகதி முகாமில் இருந்த காலப்பகுதியில் தங்களை உபசரித்த காரைதீவு மக்களுக்கும் விசேடமாக அன்றைய உதவி அரசாங்க அதிபர் திரு எஸ். அருள்சிவம், பால்மா  என்று அன்று அகதி மக்களால் அழைக்கப்பட்ட கிராமசேவகர் இராஜரெத்தினம்,  மனோகரன் அதிபர், சகாதேவராஜா ஆசிரியர் ,மகாலிங்கம் அவர்கள் உட்பட பலரை நினைவு கூர்ந்து நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments