கல்முனை மண்ணுக்கு ஏற்படபோகும் இழப்புக்களை ஹக்கீமும், மு.காவுமே பொறுப்பேற்க வேண்டும் - ஏ.சி.ஏ. சத்தார்!!
மாளிகைக்காடு செய்தியாளர்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த இன்று பாராளுமன்றத்தில் குரலெழுப்பினார். ஆனால் அங்கு நியாயபூர்வமான முஸ்லிங்களின் பக்க நியாயத்தையும், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் உண்மைத்தன்மையையும் எடுத்து கூற முஸ்லிங்களின் தரப்பில் யாருமில்லாத நிலை இருந்தது கவலையளிக்கிறது. இதனால் ஏற்படபோகும் விளைவுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், மு.கா தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களுமே பொறுப்பேற்க வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ. சத்தார் தெரிவித்தார்.இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலங்களில் இந்த பிரச்சினையை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் இராஜதந்திரமான முறையில் கையாண்டு முஸ்லிங்களுக்கோ, கல்முனை மக்களுக்கோ அவர்களின் சொத்துக்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் செயற்பட்டு வந்தார். அவரை இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தலில் களமிறங்காத வகையில் மு.கா தலைமைத்துவம் திட்டமிட்டு தடுத்தது சாணக்கியன் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் இலகுவாக இந்த விடயத்தை கையளவே என்ற கதையாடல் அம்பாறையில் பேசுபொருளாக தொடர்ந்தும் இருந்து வருகிறது.
மட்டுமில்லாது ஹரீஸ் அவர்களினால் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் கையாளப்பட்ட வழக்கின் போதும் எவ்வித ஆதரவும் வழங்காது இருந்த மு.கா தலைமைத்துவமும், இந்த வழக்கின் பாரதூரத்தை மக்களுக்கு குறைத்து பேசி எள்ளிநகையாடிய மு.கா செயலாளரும், இந்த விடயத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மு.கா பிரமுகர்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு சார்பான நிலைப்பாட்டிலையே இருந்து வருகின்றனர்.
கல்முனை விடயத்தை பொறுப்புணர்வுடன் கையாண்டவரை அந்த இடத்திலிருந்து அகற்றி கல்முனை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்தமையானது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகும். அதனை மெய்ப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விடயத்தை இரண்டாவது அமர்விலையே உரத்து பேச ஆரம்பித்திருக்கிறார். இதனூடாக கல்முனை மண்ணுக்கு எதாவது அநியாயங்கள் நடைபெறுமாக இருந்தால் அதன் முழுப்பெறுப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.
ஹரீஸ் அவர்கள் இம்முறை தேர்தல் களத்தில் இல்லையென்பது உறுதியானதும் தமிழ் பிரதேசங்களில் எழுந்த வெடில் சத்தங்கள் மற்றும் வானவேடிக்கைகள் இந்த பிரச்சினையின் ஆழத்தை உணர்த்தியது என்று தெரிவித்தார்.
No comments